ரெலாவ் வேளாண்மை மைய உருமாற்றப் பெருந்திட்டம் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் – முதல்வர்

Admin

ஜார்ச்டவுன் – மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ரெலாவ் வேளாண்மை மைய பெருந்திட்டப் போட்டியில்
‘Kumpulan Sedusun Tech Valley’முதல் நிலை வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, ரிம30,000 மதிப்புள்ள ரொக்கப்பணத்தை பரிசாகத் தட்டிச் சென்றது.

இரண்டாவது இடத்தை ரிம15,000 ரொக்கப் பரிசுடன் Qhawarizmi வென்றார். மூன்றாம் நிலையில் வென்ற SMOA-ANGKASALAB, ரிம7,000 ரொக்கப் பரிசைப் பெற்றார். போட்டியின் இறுதிக்கட்டத்திற்கு வெற்றிகரமாக நுழைந்த ஐந்து போட்டியாளர்களுக்கு ஆறுதல் பரிசாக ரிம2,000 பணமும் வழங்கப்பட்டது.

பினாங்கில் உள்ள ரெலாவ் விவசாய மையத்தை ‘வேளாண் சிலிக்கான் பள்ளத்தாக்கு’ ஆக மேம்படுத்தி உருமாற்றம் காண்பதே இப்போட்டியின் நோக்கமாகும், என மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.

“இந்த வேளாண் பெருந்திட்ட போட்டியானது, ரெலாவ் வேளாண்மை மையத்தின் திறனை மாநில அரசு எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதை அறிவதற்கும் அவ்விடத்தை வேளாண் சுற்றுலாத் தலமாக உருவாக்குவதற்கும் துணைபுரிகிறது,” என்றார்.

இத்திட்டத்தை மேம்படுத்த மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்தில் முடிவுச் செய்ததாகக் கூறினார்.

“இருப்பினும், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான செலவு ஏறக்குறைய ரிம46 மில்லியன் ஆகும்,” என்று கோம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் நில மேம்பாடு & பொருளாதாரம் மற்றும் தகவல் தொடர்புக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ் கூறினார்.

கூட்டரசு அரசாங்க முகவர்களும் ரெலாவ் விவசாய மையத்தை உருமாற்றத் திட்டத்தின் சாத்தியம் மற்றும் விவசாய பெருந்திட்டப் போட்டியின் முடிவுகளில் ஆர்வமாக உள்ளதாக, வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு, ஊரக மேம்பாடு மற்றும் சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினருமான டாக்டர். நோர்லேலா அரிஃபின் தெரிவித்தார்.

“மாநில அரசு நிதி ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், சம்பந்தப்பட்ட கூட்டாரசு முகவர்களிடம் கோரலாம்.

“கூடுதலாக, பினாங்கு மாநிலத்தில் நடைமுறையில் உள்ளதைப் போல, இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற வேளாண்மை பெருந்திட்டம் குறித்து ஆய்வு செய்ய தனியார் துறையை அணுகுவோம்,” என்று அவர் கூறினார்.