அண்மையில் லண்டன் மாநகரில் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் 2012 விளையாட்டுப் போட்டியில் சிறப்பான முறையில் விளையாடி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெள்ளிப் பதக்கத்தை வாகை சூடிய நாட்டின் முதல் நிலை பூப்பந்து வீரரான லீ சோங் வெய்க்குப் பினாங்கு மாநில நீர் வழங்கு மாநகராட்சி சிறந்த சாதனையாளர் விருதும் ரி.ம 100,000 ஊகுவிப்புத் தொகையும் வழங்கி கௌரவித்தது.
உலகின் முதல் நிலை பூப்பந்து வீரரான சீனாவின் லின் டானுடன் இறுதியாட்டத்தில் மோதியபோது தான் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு விடாமுயற்சியுடன் விளையாடியதாக அண்ணன் லீ சோங் ஹுனுடன் வந்த சோங் வெயை சந்தித்த போது கூறினார். மேலும், மலேசிய மக்களின் ஈடு இணையற்ற அன்புக்கும் நல்லாதரவுக்கும் தன் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
கொம்தாரில் நடைபெற்ற இவ்விருதளிப்பு விழாவில் மாண்புமிகு முதல்வர் உயர்திரு லிம் குவான் எங் அவர்களால் சிறப்பிக்கப்பட்ட சோங் வேய், “ நான் என்னுடைய முழுமையான ஆட்டத்தைத்தான் வெளிபடுத்தினேன். எனினும் காயம் காரணமாகவே நான் சற்றுக் கவனத்துடன் விளையாட நேரிட்டது.” என்று பகர்ந்தார். கடந்த மே மாதம் சீனாவில் நடைபெற்ற தோமஸ் கிண்ணப் போட்டியில் டென்மார்க் வீரர் பீட்டர் ஹோக் கேட்டை எதிர்த்து விளையாடிய போது கணுக்காலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக சோங் வேய் இரண்டரை மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டியதாயிற்று. இதனால் இவர் ஒலிம்பிக் போட்டியை எதிர்கொள்ள வெறும் இரண்டே வாரங்கள்தான் பயிற்சியில் ஈடுபட முடிந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
“எதிர்வரும் செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெறவுள்ள பூப்பந்து போட்டியில் கலந்து கொள்ளவிருப்பதால் சீக்கிரம் குணமடைய தற்பொழுது நான் எந்தவொரு போட்டியிலும் பங்குபெறாமல் நல்ல ஓய்வு பெறவிருக்கிறேன். மேலும், தொடர்ந்து பங்குபெறவிருக்கும், காமன்வெல்த் போட்டி மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் என் கவனத்தைச் செலுத்துவேன்” என்று வலியுறுத்திய சோங் வேய் 2016-இல் பிரேசில் நாட்டில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதைப் பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
“மிகப்பெரிய விளையாட்டுக்களமாகத் திகழும் ஒலிம்பிக் விளையாட்டில் இரண்டு முறை வெள்ளிப்பதக்கத்தை வென்ற புக்கிட் மெர்தாஜாமைச் சேர்ந்த லீயின் சாதனையைக் கண்டு மாநில அரசு பெருமை கொள்கிறது. ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கத்தை வெல்லாவிட்டாலும் மலேசிய மக்களின் மனதில் தங்கத்தை மிளிரச் செய்துவிட்டார்” என்று முதல்வர் லிம் குவான் எங் புகழாரம் சூட்டினார்.
இதனைத் தொடர்ந்து, லீ சோங் வெய், தனது பெயரில் பூப்பந்து மையமும் சமூக நல அறவாரியமும் அமைக்க ஆர்வம் கொண்டுள்ளதாக அறிவித்தார். இதன் மூலம் தான் பூப்பந்து விளையாட்டில் பல இளைய தலைமுறையினரை உருவாக்கவும் ஆதரவற்ற ஏழை மக்களுக்கு உதவி புரியவும் முடியும் என்றார்.
“ஓடி விளையாடு பாப்பா; நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா”
என்று பாடினார் மகாகவி பாரதியார். ஆக, விளையாட்டை வெறும் நேரத்தைப் போக்கும் கருவியாகக் கொள்ளாமல் அதனைச் சாதனை புரியும் ஆயுதமாகவும் பயன்படுத்தி வெற்றி மாலை சூடுவோம்.