லிட்டல் இந்தியா பிரமாண்ட நுழைவாயில் இந்த ஆண்டு நிறைவுப்பெறும்

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு லிட்டல் இந்தியா தலத்தின் நுழைவாயில் நிர்மாணிப்புப் பணிகள் இவ்வாண்டு ஜுலை மாதம் தொடங்கப்பட்டு நவம்பர் மாதம் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

“பினாங்கு மாநகர் கழகம் இந்த நுழைவாயிலுக்கானக் கட்டடமைப்பு புரனாய்வுப் பணிகள் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நுழைவாயில் முடிந்த வரையில் இவ்வாண்டு அக்டோபர் மாதம் கொண்டாடப்படும் தீபாவளி கொண்டாடத்திற்கு முன்னதாக நிறைவுப்பெற்றால் வருகையாளர்களை மிகவும் கவரும்,” என பினாங்கு இந்தியர் வர்த்தகத்திற்கு வருகையளித்த போது பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் குறிப்பிட்டார்.

பினாங்கு மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் பினாங்கு இந்தியர் வர்த்தகர் சங்கம் உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.

பினாங்கு நம்பிக்கை கூட்டணி அரசு 2018 ஆம் ஆண்டின் தேர்தல் வாக்குறுதிகளில் 90% நிறைவேற்றியுள்ளது. பிரமிக்க வைக்கும் இந்த லிட்டல் இந்தியா நுழைவாயிலும் அதில் அடங்கும்.

 

“மூன்று தவணையாக நம்பிக்கை கூட்டணி அரசிற்கு ஆதரவு நல்கி வரும் அனைவருக்கும் நன்றி. மாநில அரசு தொடர்ந்து இம்மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்,” என பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினருமான சாவ் சூளுரைத்தார்.

 

மேலும், பினாங்கு இந்திய வர்த்தகர் தரப்பிடம் இருந்து கருத்துகள், விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனைகளை மாநில முதல்வர் சாவ் வரவேற்றார். இவை அனைத்தும் அடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் இணைக்கப்படும் என சாவ் நம்பிக்கை தெரிவித்தார்.

 

இந்நிகழ்ச்சியில் நம்பிக்கை கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களான கஸ்தூரிராணி பட்டு, ஆர்.எஸ்.என் இராயர், ராம்கர்பால் சிங்; சட்டமன்ற உறுப்பினர்களான சத்தீஸ் முனியாண்டி மற்றும் இன்னும் அதிகமானோர் கலந்து சிறப்பித்தனர்.

 

பினாங்கு இந்தியர் வர்த்தகர் சங்கம் தனது 100-ஆவது நிறைவு விழாவை கொண்டாடவிருக்கிறது. மலேசியாவில் இதுவே முதல் வர்த்தகர் சங்கம் என அதன் தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் குறிப்பிட்டார். பினாங்கு வர்த்தகர் சங்கம் தொடர்ந்து பினாங்கு மாநில அரசுடன் இணைந்து இந்தியர்களின் நலனுக்காக நல்ஆதரவை வழங்கும் என அவர் மேலும் சூளுரைத்தார்.

 

“இந்தியர் மக்களிடம் இருந்து மாநில அரசிற்கு நல்லிணக்கம், அணுகுமுறை மற்றும் முழு ஆதரவு கிடைக்கும் என்பது எங்களின் நம்பிக்கையாகும். பினாங்கு வர்த்தகர்கள் தங்களின் பிரச்சனைகளை அந்தந்த தொகுதிகளில் உள்ள பிரதிநிதிகளிடம் தெரிவிக்கலாம். அவர்களுக்கு இயன்ற உதவிகள் உடனடியாக நல்கப்படும்,” என ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர் தமது நிறைவுரையில் குறிப்பிட்டார்.

ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர் பினாங்கு இந்தியர் வர்த்தகர் சங்கத்தில் உரையாற்றினார்.