பாகான் டாலாம் – லெபு கம்போங் பெங்காலியில் கட்டுமானம் நிறைவுக் கண்ட பல்நோக்கு விளையாட்டு மைதானமானது, பட்டர்வொர்த் டிஜிட்டல் நூலகம் (BDL), லெபு கம்போங் பெங்காலி விளையாட்டுப் பூங்கா மற்றும் செபராங் பிறை மாநகர் கழகம் (MBSP) பொது நீச்சல் குளம் போன்ற பிற ஒருங்கிணைந்த சமூக மையத் திட்டத்தின் கீழ் தொடர்புடைய உள்கட்டமைப்புத் திட்டங்களை நிறைவுச் செய்கிறது.
மேலும் கருத்து தெரிவித்த முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பட்டர்வொர்த் ஒரு சிறந்த எடுத்துக்காட்டுத் திட்டமாக அமைகிறது.
இது செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) மற்றும் திங்க்சிட்டி சென்.பெர்ஹாட் இடையிலான ஒத்துழைப்பின் மூலம் 2015 ஆம் ஆண்டு முதல் புதிய பட்டர்வொர்த் திட்டம் செயல்பாடுக் காண்கிறது.
“புதிய அல்லது ஏற்கனவே உள்ள பகுதிகளில் எந்தவொரு மேம்பாட்டுத் திட்டமும் உள்ளூர் மக்களின் நல்வாழ்வைப் பாதிக்கும் வகையில் செயல்படுத்தக்கூடாது.
“நகர்ப்புற மேம்பாடு என்பது உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு மட்டுமல்ல, பினாங்கு2030 தொலைநோக்குப் பார்வையின் கீழ் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, உள்ளூர் சமூக கலாச்சாரம், பாரம்பரியத்தைப் பாதுகாப்பதும், பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதும் இதில் அடங்கும்,” என்று பாடாங் கோத்தா மாநில சட்டமன்ற உறுப்பினருமான சாவ் லெபு கம்போங் பெங்காலி பல்நோக்கு விளையாட்டு மைதானத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், முன்னதாகப் பேசிய முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங், கடந்த 2021,மார்ச்,28 அன்று, எம்.பி.எஸ்.பி ஏற்பாட்டில் 325 உள்ளூர் சமூக உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் அமர்வு நடைபெற்றது, என்றார்.
இந்தக் கலந்துரையாடலில் இந்தப் பகுதியில் குறிப்பாக லெபு கம்போங் பெங்காலி விளையாட்டு மைதானம், வாகன நிறுத்துமிடம், மற்றொரு பகுதியை அசல் பயன்பாடாக வைத்திருக்கும் திட்டத்திற்கு 81 சதவீதம் மக்கள் ஆதரவு அளித்தனர்.
“1,466 சதுர அடி பரப்பளவு கொண்ட இத்தளத்தில், பல்நோக்கு விளையாட்டு மைதானம் மற்றும் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு புதிய கூறுகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
“இந்தப் பிரதான திட்டமிடல் மூலம் உள்ளூர் சமூகத்தின் நலனுக்காக தரமான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் எம்.பி.எஸ்.பி இன் உறுதிப்பாட்டிற்கு இத்திட்டம் மற்றொரு சான்றாகும்,” என்று பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் இவ்வாறு விளக்கமளித்தார்.
இதற்கிடையில், லெபு கம்போங் பெங்காலி பல்நோக்கு விளையாட்டு மைதான மேம்படுத்தும் பணிகள் கடந்த 2024, பிப்ரவரி,15 அன்று தொடங்கி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று முழுமையாக நிறைவடைந்ததாகத் தெரிவித்தார்.
கம்போங் பெங்காலி சாலையில் உள்ள பல்நோக்கு விளையாட்டு மைதானம் மற்றும் பொது வாகன நிறுத்துமிடம் மேம்பாட்டுத் திட்டம் மொத்தம் ரிம381,000.00 செலவில் நிறைவடைந்துள்ளது. இது எம்.பி.எஸ்.பி நிதி ஒதுக்கீட்டில் முழுமையாக நிதியளிக்கப்பட்டது.
“1,465 சதுர மீட்டர் மைதானம் பல முக்கிய கூறுகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது, இதில் ஃபுட்சல், கூடைப்பந்து, செபக் தக்ரா மற்றும் கைப்பந்து ஆகியவற்றிற்குப் பயன்படுத்தக்கூடிய பல்நோக்கு மைதானமாக விளங்குகிறது.
“இந்த மேம்படுத்தல் திட்டத்தில் மொத்தம் 32 இடங்களைக் கொண்ட வாகன நிறுத்துமிடத்தைக் கொண்டுள்ளது. இதில் 31 இடங்கள்
பொது மக்களுக்காகவும், ஓர் இடம் மாற்றுத்திறனாளிகளுக்காகவும் (OKU) ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பயனர் நட்பு பாதசாரி பாதைகள் ஆகியவை உள்ளடங்கும்,” என்று அவர் விளக்கமளித்தார்.
இந்நிகழ்ச்சியில், பாகான் டாலம் சட்டமன்ற உறுப்பினர், குமரன்; பாகான் ஜெர்மல் சட்டமன்ற உறுப்பினர், சீ யீ கீன்; சுங்கை புயு சட்டமன்ற உறுப்பினர், பீ சின் சீ; எம்.பி.எஸ்.பி கவுன்சிலர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.