‘கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே’
என்ற வெற்றி வேற்கைக்கொப்ப ஏழ்மை நிலையில் வாழும் பெற்றோர்கள் எப்பாடு பட்டாவது தங்கள் பிள்ளைகளைக் கல்வி கற்க வைக்க வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளைக் கொண்டுள்ளனர். அப்பெற்றோர்களுக்குத் தோள் கொடுக்கும் வண்ணம் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மாணவர்களுக்கு இலவசப் பள்ளிச் சீருடைகள், காலணிகள், பைகள், கல்வி உபகரணங்கள் என பலவற்றை வழங்கி உதவி வருகின்றனர்.
அவ்வகையில் கடந்த டிசம்பர் 25-ஆம் திகதி டத்தோ கெராமட் கீழ் இயங்கும் ஏழு சமூக மேம்பாட்டு மற்றும் பாதுகாப்புக் குழுக்களைச் சேர்ந்த 172 மாணவர்களுக்குப் பள்ளிச் சீருடைகள் வாங்குவதற்கு இலவசப் பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன. இதனை டத்தோ கெராமட் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு ஜெகதிப் சிங் டியோ அவர்கள் வழங்கினார். இந்தப் பள்ளிச் சீருடைக்கான இலவசப் பற்றுச் சீட்டு வழங்கும் திட்டத்திற்காகத் தம் தொகுதி நிதியிலிருந்து ரிம13,154 செலவிடப்பட்டுள்ளது என்று திரு ஜெகதிப் தெரிவித்தார். ஏழை மக்கள் சுமக்கும் தங்கள் பிள்ளைகளின் கல்விச் செலவினத்தைக் குறைக்கும் நோக்கில் இந்தத் திட்டம் ஆண்டு நிகழ்ச்சியாக நடைபெற்று வருகிறது என்று மேலும் கூறினார்.
இப்பற்றுச் சீட்டு ஆரம்பப் பள்ளிகள் மற்றும் இடைநிலைப் பள்ளிகளையைச் சேர்ந்த பொருளாதார நலிவுற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. ஒவ்வோரு மாணவரும் ரிம 75 முதல் ரிம 90 மதிப்புள்ள பற்றுச் சீட்டைப் பெற்றுக் கொண்டனர்.
டத்தோ கெராமட் சட்டமன்ற உறுப்பினர் திரு ஜெகதிப் சிங் டியோ (நடுவில்) வழங்கிய இலவசப் பள்ளிச் சீருடைகளுடன் மாணவர்கள் மகிழ்ச்சியில் இருப்பதைக் காணலாம்.