வயதில் மூத்தோர்கள் வழிக்காட்டலில் இளைஞர்கள் தலைமைத்துவம் வகிக்க வேண்டும் – தர்மன்

மலேசிய இந்து சங்கம் புக்கிட் பெண்டேரா வட்டாரம் செயலவை உறுப்பினர்கள்
புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவையின் தலைவர் விவேக நாயகன் தர்மன் மலேசிய இந்து சங்கத்தின் தலையாய கொள்கை பிரச்சூரத்தைக் காண்பிக்கிறார்

“இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்பதற்கு இணங்க இந்து சங்கம் போன்ற அரசு சாரா இயக்கங்களில் தலைமைத்துவப் பதவிகளில் இருக்கும் அனுபவமிக்க வயதில் மூத்தோர்கள் இளைஞர்களுக்கு வழிவிட்டு ஆலோசகராகவும் உதவித் தலைவராகவும் இருந்து இளைஞர்கள் தொண்டு ஆற்ற துணைப்புரிய வேண்டும். இளைஞர்கள் இது போன்ற இயக்கங்களில் தலைமைத்துவம் பெற்று  தீயச் செயல்களில் இருந்து விடுப்படுவதோடு சமூக நலத் தொண்டில் ஈடுப்படுவர்.

“1965ஆம் ஆண்டு துவக்கப்பட்ட மலேசிய இந்து சங்கம் இன்று 14 மாநிலங்களில் 180 வட்டாரப் பேரவைகள் துணையுடன் நாடு முழுவதும் சிறப்பாக இயங்கி வருகிறது. பினாங்கு மாநிலத்தின் கீழ் 12 வட்டாரப் பேரவைகள் இயங்குகின்றன, அதில் புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவை கடந்த 16 ஆண்டுகளாகச் சிறந்த சேவை ஆற்றி வருகிறது. 200 உறுப்பினர்கள் கொண்ட இந்தப் புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவையில்  பெரும்பான்மையினர் இளைஞர்கள் ஆவர். இந்தப் பேரவையின் அனைத்து உறுப்பினர்களும் நல்ல ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 120 நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன,’’ இந்து சங்க புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவையின் தலைவர் விவேக நாயகன் தர்மன் முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.

மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவையின் சேவை மையம் கொம்ப்லக்ஸ் மாஷாரக்காட் பெஞ்ஞாயங், ஜாலான் உத்தாமாவில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பேரவை இளைஞர், ஆலயம், சமூக நலன், கல்வி மற்றும் மகளிர் என ஐந்து பிரிவுகளை மையப்படுத்திச் செயல்படுகிறது.

புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற திருமுறை ஓதும் போட்டியில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கல்வி நமது அறிவுக்கண்களைத் திறக்கும் கருவியாகச் செயல்படுகிறது. எனவே, புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவைத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி தேசியப் பள்ளிகளில் பயிலும் இந்து மாணவர்களுக்கும் சமயக் கல்வி புகட்டும் நோக்கத்தில் அண்மையில் ‘மை மாணவர்’ எனும் சமயமும் கலையும் சார்ந்த திட்டத்தைக் கடந்த ஜூன் மாதம் 15-ஆம் நாள் தொடங்கி ஒவ்வொரு சனிக்கிழமை காலை மணி 8.30 முதல் 11.00 மணி வரை இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி வளாகத்தில் இனிதே நடந்துக் கொண்டிருக்கிறது. இதுவரை 7 முதல் 15 வயது மதிக்கத்தக்க 130 மாணவர்கள் இத்திட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர். மேலும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்காகப் பிரத்தியேகமாக தன்முனைப்புப் பட்டறைகளும் நடத்தி இந்திய மாணவர்கள் சமயம் மற்றும் நன்னெறிக்கூறுகளைப் பின்பற்றி சிறந்த தலைவர்களாக உருவாக்க வழிவகுக்கின்றனர்.

இவ்வட்டாரத்தில் அமைந்திருக்கும் இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியில் சமய வகுப்பு நடத்தப்படுகிறது. மாணவர்களிடையே தேசப்பற்றை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்ப்பள்ளிகளில் சுதந்திர தினக்கொண்டாட்டமும் நடத்தப்படுகின்றன.

 

சமூக நலத்திட்டங்கள் ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அடித்தளமாகத் திகழ்கிறது.அவ்வகையில் இவ்வட்டாரப் பேரவை பல மெகா திட்டங்களைச் செயல்படுத்தி இந்தியர்களின் மேம்பாட்டிற்கு அஸ்திவாரமாக அமைகிறது. ஒவ்வொரு மாதமும் முதல் வார ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை மணி 10.00 முதல் மதியம் 12.00 வரை இவ்வட்டார சேவை மையத்திற்கு நாடி வரும் பொது மக்களுக்குச் சமூகநல உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், ஐந்தாவது ஆண்டு வெற்றிக்கரமாக அன்னம் சக்கரம் திட்டத்தின்(Annam on Wheels programs) கீழ் தைப்பூசம் முதல் நாள் பந்தல் தன்னார்வலர்களுக்கு உணவு வழங்குதல்; ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் இரண்டாவது திங்கட்கிழமை ஜார்ச்டவுன் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்குதல் மற்றும் கல்விச்சுற்றுலா மேற்கொள்ளும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்குதல் ஆகியவை முற்றிலும் இலவசமாகக் கொடுக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஏறக்குறைய 4,000 பொது மக்களுக்கு உணவும் குடிநீரும் வழங்கப்பட்டன. இத்திட்டத்தைக் கசானா அமைப்பு அங்கீகரித்து சன்மானமும் கொடுத்தாக விவேக நாயகன் தர்மன் அகம் மகிழ தெரிவித்தார்.

மாநில அரசின் முத்தியாரா உணவு வங்கி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதம் முதல் மற்றும் மூன்றாவது புதன்கிழமையில் பதிவுப்பெற்ற பி40 குழுவைச் சேர்ந்த பொது மக்களுக்கு இலவசமாக காய்கறிகள், பழங்கள்,ரொட்டிகள் போன்ற உணவு வகைகள் வழங்கப்படுகின்றன.

2019-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து இவ்வட்டார சேவை மையத்திற்கு உதவியை நாடி வரும் பி40 குழுவைச் சேர்ந்த வசதிக் குறைந்த குடும்பங்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

 

ஓர் ஆண்டில் இரு முறை குறிப்பாக தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தீபாவளிப் பண்டிகை, அதாவது ‘அன்பான சமூகத்துடன் நற்பணி’ எனும் நிகழ்ச்சியின் போது அவர்களுக்குத் தேவைப்படும் மளிகைப் பொருட்கள் வழங்கப்படுகிறது. ஷான் மற்றும் இராமகிருஷ்ணா ஆதரவற்ற இல்ல குழந்தைகளுக்குத் தீபாவளி அன்பளிப்பாக பணம் வழங்கப்படுகிறது, என கூறினார்.

இளைஞர்களுக்கு ஊக்குவிப்பு கொடுக்கும் நோக்கத்தில் புட்சால், போலிங், விவேகா புகைப்படக்கூடம், கோலம் வரைதல் ஆகிய போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதுமட்டுமின்றி, அவர்களின் ஒத்துழைப்பில் பெட்டிஸ் பார்க், விநாயகர் ஆலயத்தில் ஒரு மாதத்திற்கு ஒரு முறை துப்புரவுப்பணி மேற்கொண்டு ஆலயம் தூய்மைப்படுத்தப்படுகிறது.

தமிழர்களின் பாரம்பரிய சமையல், கூட்டுப்பிரார்த்தனை, பொங்கல் விழா, அன்னையர் தினம், தந்தையர் தினம் போன்ற நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வட்டாரத் தலைமைத்துவத்தில் அன்னையர் தினத்தன்று தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று அனிச்சல் மற்றும் பூங்கொத்து வழங்கி தாய்மார்களை மகிழ்விக்கின்றனர்.

 

இந்த வட்டாரத்தின் கீழ் 10 ஆலயங்கள் உள்ளன. ஆலயங்களின் ஒத்துழைப்புடன் ‘ஆலயம் செல்வோம்’ மற்றும் ‘அட்சயப் பாத்திரம்’ போன்ற திட்டங்களுடன் சமய சொற்பொழிவுகளும் வழிநடத்தப்படுகின்றன. ‘அட்சயப் பாத்திரம்’ திட்டத்தின் கீழ் ஆலயத்திற்கு வருகையளிக்கும் பொது மக்கள் தங்களால் இயன்ற மளிகைப் பொருட்களைத் தானமாக அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தில் வைக்கலாம். சேகரிக்கப்படும் பொருட்களை அவ்வட்டாரத்தில் வாழும் வசதிக் குறைந்த பொது மக்களுக்கு ஆலய நிர்வாகம் பகிந்தளிக்கின்றனர். மேலும், ‘ஆலயம் செல்வோம் ’ என்ற நிகழ்ச்சியின் கீழ் ஆலய அடிப்படை வழிப்பாடு முறைகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இத்திட்டம் தமிழ்ப்பள்ளிகளின் ஒத்துழைப்புடன் பேரவை இலவசமாக வழிநடத்துகிறது.

ஆலயம் என்பது சமயம் மற்றும் சமூகநலம் சார்ந்த மையமாகத் திகழ வேண்டும். ஆலயங்களில் சமயம் மற்றும் தேவார வகுப்பு, பாரம்பரியம், கலை, கலாச்சாரம் சார்ந்த வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற தனது ஆவலையும் தர்மன் பதிவு செய்தார்.

மேற்குறிப்பிட்ட இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் செயல்படுத்த முதுகெழும்பாகச் செயல்படும் பொது மக்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் மூலம் நன்கொடை பெறப்படுகிறது. அதே வேளையில் சில திட்டங்களுக்கு மாநில அரசின் நிதியுதவியும் பெறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாகவே, ஒவ்வொரு நிகழ்ச்சிகளில் இருந்து 20 விழுக்காடு நிதி சேமிக்கப்பட்டு சமூகநலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது என தர்மன் விளக்கமளித்தார்.

துடிப்புடன் செயல்பட்டு வரும் புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவைக்கு மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநிலத்தின் சிறந்த வட்டாரப் பேரவைக்கான விருது பெற்றது. இப்பேரவை அதிகமான உடல் உறுப்பு மற்றும் இரத்த தானம் திரட்டியதற்கான விருதும் பெற்றது.  மேலும், நாட்டுக்கோட்டை செட்டியார் அறங்காவலர்கள் நால்வர், சிவன் மற்றும் அபிராமி தெய்வச் சிலைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.

முதலில் நாம் மாறுவோம் பின்பு பிறரை மாற்றுவோம் என்ற இலக்குடன் செயல்படும் விவேக நாயகன் தர்மன் எதிர்காலத்தில் மலேசிய இந்து சங்கம் அதிகாரத்துவமிக்க இயக்கமாக செயல்பட்டு பல உருமாற்றுத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என கூறினார்.  ஒவ்வொரு திட்டங்களும் நிலையானதாகவும் நீண்ட காலத் திட்டமாகவும் இருத்தல் அவசியம் என வலியுறுத்தினார்

புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவையின் திட்டங்களுக்கு ஆதரவு மற்றும் நன்கொடை வழங்க விரும்பும் நல்லுள்ளங்கள் வட்டாரப் பேரவையின் விவேக நாயகன் தர்மன் அவர்களை 012-4051207 என்ற எண்களில் தொடர்புக்கொள்ளலாம்.

 

2010-ஆம் ஆண்டு மலேசிய இந்து சங்க உறுப்பினராக சேர்ந்து 2015-ஆம் ஆண்டு புக்கிட் பெண்டேரா வட்டாரத் தலைவராக பதவியேற்ற நாள் முதல் சிறந்த தலைமைத்துவத்தை ஆற்றி வரும் தேசிய இளைஞர் பிரவுத் தலைவர் விவேக நாயகன் தர்மன் அவர்களுக்கு முத்துச் செய்திகள் நாளிதழ் நிறுவனம் வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறது.