பினாங்கில் அமைந்திருக்கும் வழிபாட்டுத் தளங்களான கோவில்கள், தேவாலயம், சீனக் கோவில் மற்றும் குருத்வாரா போன்ற வழிபாட்டுத் தளங்களின் மேம்பாடுகளுக்கும் பாரமாரிப்புக்கும் மாநில அரசு அறக்கட்டளை நிதியம் (Tabung Penyelengaraan Rumah Ibadat Bukan Islam) ஒன்றினை உருவாக்கியுள்ளதை கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ. இந்நிதியம் வீடமைப்பு திட்டங்களில் வழிபாட்டுத் தளங்களுக்கு இடம் ஒதுக்கீடு வழங்காத மேம்பாட்டளர்களிடம் பினாங்கு ஊராட்சி மன்றங்களால் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த அறக்கட்டளை நிதியத்தை சிறந்த முறையில் பயன்படுத்த கடந்த 18 ஆகஸ்டு 2015 -ஆம் நாள் வீடமைப்பு ஆட்சிக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இக்குழு ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.ஜெக்டிப் தலைமையில் மாநில கணக்காய்வு துறையின் கீழ் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 31 மார்ச் 2015 வரை பினாங்கு மாநகர் கழகம் மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழகத்தின் மூலம் ரிம4,231,032.50 வசூலிக்கப்பட்டுள்ளது பாராட்டக்குறியதாகும்.
வழிபாட்டுத் தள மேம்பாடு நிதி ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வழிபாட்டுத் தள உரிமையாளர்கள் தத்தம் தங்களின் விண்ணப்பங்களை ஒருங்கிணைப்பு குழுவிடம் வழங்க வேண்டும். ஒவ்வொரு விண்ணப்பத்தின் கோரிக்கைக்கு ஏற்ப அதிகப்பட்சமாக ரிம 20,000 வரை நிதியம் வழங்கப்படும். இந்நிதியத்தை கொண்டு, வழிபாட்டுத் தளங்களின் கட்டுமானப் பணிகள், பராமரிப்புகள், மேம்பாடுகள் போன்றவைகளுக்கு பயன்படுத்தலாம் என செய்தியாளர் சந்திப்பில் விவரித்தார் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.ஜெக்டிப்.} else {