வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் தகுதிப் பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் – சுந்தராஜு

Admin
img 7474

 

பெங்காலான் கோத்தா – பினாங்கு மாநில வீடமைப்பு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்தம் 271 தனிநபர்கள் ஜார்ஜ்டவுன் நகரில் குறைந்த விலையில் சொந்த வீட்டைப் பெறும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.

வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர், டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ, பெறுநர்கள் அனைவரும் ஜாலான் C.Y சோய் அருகே வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடு (RMM) வகை B-ஐ (ரிம72,500) பல்வேறு வசதிகளுடன் பெறுகின்றனர், என்றார்.

*நீங்கள் அனைவரும் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடு வகை B ஒரு பிரதானப் பகுதியில், முழுமையான வசதிகளுடன் நகர மையத்திற்கு அருகாமையில் அமைந்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

“2030 ஆம் ஆண்டிற்குள் பல்வேறு வகையான 220,000 வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளை நிர்மாணித்து பொது மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்ற மாநில அரசின் இலக்கை நிறைவேற்றுவது
எங்களின் பொறுப்பாகும்,” என்று ஃபோர்சோர் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டுரிமைக் கடிதம் வழங்கும் நிகழ்ச்சியில் சுந்தராஜூ இவ்வாறு கூறினார்.

இந்த திட்டம் 2027 ஆம் ஆண்டின் மத்தியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பெங்காலான் கோத்தா மாநில சட்டமன்ற உறுப்பினர், வோங் யுயி ஹர்ங்; பினாங்கு முதலமைச்சரின் கார்ப்பரேஷன் வாரிய (சி.எம்.ஐ) பொது மேலாளர், டத்தின் எஸ்.பாரதி மற்றும் டான் வா குழுமம் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹாங் யேம் வா ஆகியோர் கலந்து கொண்டனர்.

டான் வா குழுமம் 321 B-வகை வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளை நிர்மாணிக்கும். மீதமுள்ள யூனிட்கள் (50 யூனிட்கள்) தகுதியான நபர்களுக்கு வீட்டுவசதி செயல்திறன் மற்றும் சாதனைக் குழு (HOPE) அமைப்பு கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படும்.

பிறை சட்டமன்ற உறுப்பினருமான சுந்தராஜூ, பொதுமக்கள் தங்கள் தரவை வீட்டு தகவல் அமைப்பின் (SMP) கீழ் தொடர்ந்து புதுப்பிக்குமாறு அறிவுறுத்தினார். ஏனெனில், இதுவரை 8,000க்கும் குறைவான விண்ணப்பதாரர்கள் மட்டுமே தங்கள் விவரங்களைப் புதுப்பித்துள்ளனர். கிட்டத்தட்ட 40,000 விண்ணப்பதாரர்கள் வீட்டுத் தகவல் அமைப்பில் தங்கள் விவரங்களைப் புதுப்பிக்கவில்லை.

“நீங்கள் உங்கள் விவரங்களை புதுப்பித்துக் கொள்வது மிக அவசியமாகும். ஏனென்றால், உங்களது தற்போதைய தரவை நாங்கள் அறிந்துகொள்ள முடியும். அதோடு, தகுதியானப் பெறுநர்களுக்கு வீடுகள் வழங்கவும் இது எளிதாக்கும்.

“கடந்த ஜனவரி 2024 இல் தரவைப் புதுப்பித்த சிலருக்கு கடந்த ஏப்ரல் மாதமே வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. தகுதியான தனிநபருக்கு வீடுகள் பெறும் வாய்ப்புகள் வழங்கப்படும்.

“நான் வீடமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினராகப் பதவியேற்றப் பின்னர், எனது தலைமைத்துவத்தின் கீழ் நடைபெற்ற ஆறு ‘HOPE’
சந்திப்புக் கூட்டங்கள் மூலம் மொத்தம் 2,765 பொது மக்கள் வீடுகளைப் பெற அங்கீகரிக்கப்பட்டன,” என சுந்தராஜு மேலும் விவரித்தார்.