- பிறை – “தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் கல்விக்கேள்விகளில் சிறந்து விளங்க முடியும். வாசிப்புப் பழக்கம் தலைச்சிறந்த மாணவனை உருவாக்க இயலும்,” என பிறை தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு புத்தக அன்பளிப்பு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி ராணி பட்டு இவ்வாறு தெரிவித்தார்.
பத்து காவான் நாடாளுமன்றம், பினாங்கு மாநில சமூகநல ஒற்றுமை கழக இணை ஏற்பாட்டில் ‘புத்தகம் திரட்டும் திட்டம்’ இனிதே நடத்தப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக பத்து காவான் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஐந்து தமிழ்ப்பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.
இத்திட்டத்தில் சேகரிக்கப்பட்ட 2,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் பிறை தமிழ்ப்பள்ளி, பிறை தோட்டத் தமிழ்ப்பள்ளி, ஜூரு தோட்டத் தமிழ்ப்பள்ளி, பத்து காவான் தமிழ்ப்பள்ளி மற்றும் வால்டோர் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி ராணி பட்டு நேரடியாக வருகையளித்து தனது கரங்களால் எடுத்து வழங்கினார்.
இந்தக் கழகத்தின் அடுத்த கட்ட திட்டமாக ஆலயங்களிலும் சமயம் மற்றும் கல்வி சார்ந்த நூலகம் அமைக்க எண்ணம் கொண்டுள்ளதாக அதன் தலைவர் டாக்டர் ராஜா கூறினார்.
பிறை தோட்டத் தமிழ்ப்பள்ளியில் வானொலி நிலையம் செயல்படுத்த தேவைப்படும் அனைத்து உதவிகளும் நல்குவதாக நாடாளுமன்ற மன்ற உறுப்பினர் வாக்குறுதியளித்தார்.
இந்நிகழ்வில் பினாங்கு மாநில சமூகநல ஒற்றுமை கழகத் தலைவர் டாக்டர் ராஜா, பிறை தோட்டத் தமிழ்ப்பள்ளி வாரியக் குழுத் தலைவர் வீரையா, தலைமையாசிரியர் ரத்னவேலு மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், தமிழ்ப்பள்ளிகளுக்கு வருகையளித்த கஸ்தூரிரானி அங்கு எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து அப்பள்ளி நிர்வாகக் குழுவினருடன் இணைந்து கலந்து உரையாடினார். அதுமட்டுமின்றி, தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுக்கு என்றும் ஆதரவு அளிப்பதாகக் குறிப்பிட்டார்.