ஜார்ஜ்டவுன் – பினாங்கு மாநில வாடகைக்கார் மற்றும் பேருந்து ஓட்டனர்களின் சேவையும் பங்களிப்பும் அங்கீகரிக்கும் வகையில் மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் ஊக்கத்தொகையாக தலா ரிம300-ஐ வழங்குகிறது. மூன்றாம் முறையாக வழங்கப்படும் இந்த ஊக்கத்தொகையைப் பெற்றுக்கொள்ள பேருந்து மற்றும் வாடகைக்கார் ஓட்டினர்கள் வருகை புரிந்தனர்.
பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, ஊக்கத்தொகை வழங்கும் அதிகாரப்பூர்வ நிகழ்வு இம்முறை நடத்தப்படவில்லை; மாறாக வருகின்ற 26 மற்றும் 27 ஜனவரி திகதிகளில் தத்தம் ஶ்ரீ பினாங் அரங்கம் மற்றும் மத்திய செபராங் பிறை மாவட்ட மற்றும் காணி நில அலுவலக வளாகத்தில் பேருந்து ஓட்டுநர்களும் வாடகைக்கார் ஓட்டுநர்களும் சன்மானத்தை பெற்றுக் கொள்ளலாம் என தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு பினாங்கு மாநில அரசு 2,342 வாடகைக்கார் ஓட்டுநர்களுக்காக ரிம702,600 நிதி ஒதுக்கீடும் மற்றும் 653 பேருந்து ஓட்டுநர்களுக்கு ரிம195,900 நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது பாராட்டக்குரியதாகும். கடந்தாண்டுகளை போலவே இவ்வாண்டு இரண்டு தவணையாக இம்மானியம் வழங்கப்படும்.அனைவரின் புரிதலுக்கு, 2013 –ஆம் ஆண்டில் வாடகைக்கார் ஓட்டுனருக்கான ஊக்கத்தொகை தொடங்கப்பட்டு, அதே நேரத்தில் 2017ஆம் ஆண்டில் பேருந்து ஓட்டனர்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
பினாங்கு மாநில அரசு இம்மாதிரியான திட்டங்களின் வழி அனைத்து வாடகைக்கார் மற்றும் பள்ளி பேருந்து ஓட்டுனர்களின் நலன்களை ஒதுக்காமல் பேணி பாதுகாக்கிறது என்பது வெளிப்படையான உண்மையாகும். இதன் மூலம் மாநில அரசுடன் வாடகைக்கார் மற்றும் பள்ளி பேருந்து ஓட்டுனர்கள் நல்ல உறவு பராமரிக்கப்படுகிறது.
பினாங்கிற்கு வருகையளிக்கும் சுற்றுப்பயணிகள் பயணிப்பதற்கு வாடகைக்கார் முக்கிய பங்கு வகிக்கிறது. தரமான சேவையை வழங்குவதன் மூலம் சுற்றுப்பயணிகளின் வருகையை மேலும் அதிகரிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். பினாங்கு மாநில அரசின் திறமையான நிர்வாகத்தால் இது சாத்தியமாகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.