பட்டர்வொர்த் – ஏட்டு கல்வி மட்டுமின்றி திறன்கல்வி கொண்டும் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதற்கு ஆரம்பக் கல்வி மட்டுமே பயின்ற பொ. கமலநாதன்,38 அவர்களின் சாதனை ஒரு சான்றாகத் திகழ்கிறது. அவரின் எதிர்கால குறிக்கோளான வாகன உபரிபாகங்கள் விற்கும் கடையைத் திறக்க வேண்டும் என்ற இலட்சியம் இறுதியில் நிறைவேறியது.
“ஆரம்பக் கல்விக்குப் பின் கல்வியில் ஆர்வம் இல்லாததால் பள்ளிக்குத் தொடர்ந்து செல்லவில்லை. இருப்பினும், வாழ்க்கையில் முன்னேற்றம் காண சொந்த தொழில் கைக் கொடுக்கும் என்ற எண்ணத்தில்
பினாங்கில் அமைந்துள்ள ஒரு வாகன உபரிபாகங்கள் விற்கும் கடையில் பகுதி நேரமாக வேலைக்குச் சேர்ந்து படிப்படியாக அந்த வேலையின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டதாக,” முத்துச்செய்திகள் நாளிதழ் மேற்கொண்ட நேர்க்காணலில் இவ்வாறு கூறினார்.
இந்த கைத் தொழிலில் நிபுணத்துவம் பெற்ற கமலநாதன் இறுதியில் தனது 19வது வயதில் சுய முயற்சியில் சொந்த வாகன உபரிபாகங்கள் விற்கும் கடையை ‘மின் தாயிஸ் எண்டர்பிரைஸ்’ என்ற பெயரில் பட்டர்வொர்த், ஜாலான் பாகான் லுவாரில் தொடங்கினார். தொடக்கத்தில், இந்த வட்டாரத்தில் ‘வாகன காற்று வெளியேற்றும் குழாய்’ பொருத்தும் பிரதான கடையாக இது விளங்கியது.
சிறு வயதிலிருந்து வாகன உபரிபாகங்கள் விற்கும்
தொழிலில் கொண்ட ஆர்வமே வாகன காற்று வெளியேற்றும் குழாய் பொருத்தும் கடை தொடங்க தூண்டுகோளாக விளங்கியதாகக் கூறினார்.
அண்மையில் அறிவித்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை2.0 (பி.கே.பி) அமலாக்கத்தால் பிற சிறு தொழில் வியாபாரிகள் போல் தனது வியாபாரத்திலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறினார்.
பொதுவாகவே, எனது வாடிக்கையாளர்கள் ஜோகூர், கிளந்தான், பேராக், கெடா மற்றும் உள்ளூர் இடங்களில் இருந்து அதிகமாக வருகையளிப்பர். தற்போது
பி.கே.பி அமலாக்கத்தால் வாடிக்கையாளர்கள் மாநிலம் மற்றும் மாவட்டம் எல்லையைக் கூட கடக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரம் ஏறக்குறைய 50% பாதிப்படைந்துள்ளது.
இருப்பினும், வியாபார வாய்ப்புகளை மேம்படுத்த குறிப்பிட்ட காற்று வெளியேற்றும் குழாய் பொருத்துவதற்குச் சிறப்பு கழிவுகள் வழங்குவதாகவும் கூறினார்.
பி.கே.பி-க்குப் பிறகு தனது வியாபாரத்தை மேம்படுத்தி புதிய கிளைகள் திறக்க உத்வேகம் கொண்டுள்ளதாகக் கூறினார்.
இந்த பி.கே.பி அமலாக்கத்தால் ஆர்டர் செய்யும் வாகனம் சம்பந்தப்பட்ட பொருட்கள் நீண்ட கால இடைவெளிக்குப் பின்பே கிடைக்கிறது. மேலும், அப்பொருட்களின் விலையேற்றம் காண்பதை மறுப்பதற்கில்லை, என்றார்.
நீண்டகால வியாபாரப் பயணம் அதிகமான வாடிக்கையாளர்களை உருவாக்கியதால் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இந்த வியாபாரத்தை விளம்பரம் செய்ய முற்படவில்லை, என்றார்.
இளைஞர்கள் இத்தொழில் கற்றுக்கொள்ள ஆர்வம் கொள்ள வேண்டும். குறிப்பாக காற்று வெளியேற்றும் குழாய் பொருத்தும் கடைகள் சம்பந்தப்பட்ட வியாபாரத்தில் இந்தியர்களின் பங்களிப்பு குறைவாகவே காணப்படுவதாக கூறினார். எனவே, இந்திய இளைஞர்கள் இத்தொழிலை கற்றுக்கொள்ள இணக்கம் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.