“விளையாட்டுத் துறையில் குறிப்பாக ஓட்டப்பந்தயத்தில் இந்தியர்கள் மீண்டும் முன்னணி வகிக்க வேண்டும். கடந்த 80, 90-ஆம் ஆண்டுகளில் பல அனைத்துலக விளையாட்டுப் போட்டிகளில் கால் தடம் பதித்த இந்தியர்களின் பெயர் பட்டியல் வரிசையில் தற்காலத்திலும் நம் இளைஞர்கள் பங்கு பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் ஆர்.கே அணி உருவாக்கப்பட்டது,” என அக்குழுவின் தலைவர் கணேஷ் பிள்ளை தெரிவித்தார்.
2018-ஆம் ஆண்டு துவக்க விழாக்கண்ட ஆர்.கே அணியில் 30 உறுப்பினர்கள் இடம் பெறுகின்றனர்.
இந்த அணியில் புகழ்பெற்ற முன்னாள் தேசிய நெடுந்தூர ஓட்டப்பந்தய வீரர் ஜேகதீஸ்வரன் இடம் பெறுகிறார். இவர் ஆசியான் போட்டிகளில் (half marathon) தங்கப்பதக்கம்; பினாங்கு பால நெடுந்தூர ஓட்டப்போட்டியிலும் (Penang Bridge Run) இருமுறை தங்கப் பதக்கங்கள் பெற்று நாட்டிற்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் என்பது பாராட்டக்குறியது.
மேலும், 1998-ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 3,000 மீட்டர் தடகளம் (ஸ்டீப்பிள்சேஸ்) போட்டியில் தேசிய சாதனையைப் பதிவுச் செய்த தேசிய விளையாட்டு வீரரான சண்முகநாதன் அவர்களும் இந்த அணியில் அங்கம் வகிக்கிறார் என்றால் மிகையாகாது. இப்போட்டியில் பதிவுச் செய்யப்பட்ட ‘8.59.10’ நேர சாதனை இன்னும் முறியடிக்க வில்லை. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய பசிவிக் மாஸ்டர் விளையாட்டுப் போட்டியிலும் மூன்று தங்கப்பதக்கம் மற்றும் 1 வெள்ளி பதக்கம் எடுத்து மாநிலத்திற்கு மீண்டும் பெருமைச் சேர்த்தார்.
இந்த ஆர்.கே அணியின் துவக்கம் இந்தியர்கள் குறிப்பாக இளைஞர்களிடையே இலை மறை காயாக மறைந்திருக்கும் ஓட்டப்பந்தய திறமையை வெளிப்படுத்தத் தூண்டுக்கோளாக அமையும்.
இந்த அணி உற்சாகத்துடன் செயல்படுவதற்கு முதுகெலும்பாக புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால் சிங் திகழ்கிறார். இந்த அணியினர் விளையாட்டுத் துறையில் வெற்றி நடைப்போட ஆலோசகராகவும் பொருளாதார ரீதியிலும் நிதியுதவி நல்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில், மலேசிய அறிவியல் பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர் தொடர்பு, வேலை, பட்டதாரி வேலை வாய்ப்பு மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஏசி லேட் ரிலே 2019- (ACE LED RELAY 2019) எனும் நெடுந்தூர ஓட்டப் போட்டியில் முதல் நிலை வெற்றியாளராக ஆர்.கே.அணியினர் தேர்வு பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.
50 கிலோமீட்டர் நெடுந்தூர ஓட்டத்தை 3 மணி நேரம் 39 நிமிடம் 9 வினாடிக்குள் நிறைவு செய்து அந்த சாதனையைப் பதிவுச் செய்துள்ளனர்.
இப்போட்டியில் மொத்தம் 58 அணிகள் கலந்து கொள்ள, ஆர்.கே. அணியினர் முதலிடம் அடைந்து வெற்றிக் கோப்பை, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர்.
இந்தப் போட்டியில் ஆர்.கே. அணியைச் சேர்ந்த என்.சண்முகநாதன், கே.சசிகுமார், ஆர்.சரவணன், த.விஸ்வநாதன், ஆகியோர் வெற்றி மகுடம் சூடினர். கே.கணேஷ் பிள்ளை, ஜே.யார்திகேயன் ஆகிய இருவரும் ஆர்.கே. அணியை வழிநடத்தி வருகின்றனர்.
சவால்மிக்க இந்த ஓட்டத்தை இவ்வளவு சீக்கிரமாக நிறைவு செய்திருப்பது 2019-ஆம் ஆண்டின் மிகப் பெரிய வெற்றியாக கருதுவதாக ஓட்டக்காரர்களின் ஒருவரான விஸ்வநாதன் தங்கவேலு தெரிவித்தார்.
நாங்கள் அனைவரும் அணி ஒற்றுமையை முன்னிறுத்தி, தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டதால் இந்த போட்டியில் வெற்றி பெற்றோம். தொடர்ந்து, நிறைய நெடுந்தூர ஓட்டப்பந்தய போட்டிகளில் கலந்து கொண்டு, இந்தியர்களின் பெயரை மணக்கச் செய்வோம் என்றார்.
இந்த அணியின் வழிக்காட்டலில் கடந்த 2018 முதல் 2019 வரையில் Round the Island Relay, Hat Yai Marathon, KL Marathon, Penang Bridge Run மற்றும் பல நெடுந்தூர போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வாகைச் சூடியுள்ளனர்.
மேலும், இந்த அணி எதிர்காலத்தில் இந்திய மாணவர்களுக்கு ஓட்டப்பந்தயத்தில் பயிற்சி அளித்து, அவர்களையும் வெற்றி பெற செய்ய இலக்கு கொண்டுள்ளது. எனவே, ஆர்வமுள்ள மாணவர்கள் https://www.facebook.com/running.kaigelz எனும் முகநூல் பக்கத்தை அணுகவும்.