ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அடுக்குமாடி குடியிருப்புகளில், குறிப்பாக தண்ணீர் தொட்டிகள் இல்லாத பழைய வீடமைப்புத் திட்டங்களில் அதனை நிறுவுவதற்கு உள்ளூர் அதிகாரிகள், பினாங்கு வீடமைப்பு வாரியம் அல்லது பினாங்கு நீர் விநியோக வாரியத்திடம் (PBAPP) விண்ணப்பிக்கலாம்.
மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு இன்று நடைபெற்ற மாநில சட்டமன்றக் கூட்டத்தின் போது இதனைப் பகிர்ந்து கொண்டார்.
“2006 ஆம் ஆண்டு இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு கட்டப்பட்ட சில அடுக்குமாடி குடியிருப்புகளில், பெரிய தண்ணீர் தொட்டிகள் அல்லது யூனிட்களுக்குள் சிறிய தண்ணீர் தொட்டிகள் என எதுவும் இடம்பெறவில்லை.
“சில இடங்களில், இந்த இரு வகையான தண்ணீர் தொட்டிகளும் இல்லை.
“2006 ஆம் ஆண்டு நீர் விநியோக சேவை சட்டம் 2006 (சட்டம் 665) இயற்றப்பட்ட பிறகு, இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுக் காணப்பட்டது,” என்று சுந்தராஜூ கூறினார்.
அடுக்குமாடி மற்றும் தரை வீடமைப்புத் திட்டங்களில் குறைந்தபட்சம் 300 கேலன் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டிகளை நிறுவ வேண்டும் என்று PBAPP விதிமுறை விதித்துள்ளது என்று சுந்தராஜு விளக்கமளித்தார்.
“கூட்டு மேலாண்மை அமைப்பு (JMB) மற்றும் மேலாண்மை குழு (MC) மூலம் தண்ணீர் தொட்டிகளை நிறுவ முன்முயற்சி எடுக்க வேண்டும்
“அவர்கள் உள்ளூர் அதிகாரிகள் அல்லது பினாங்கு வீட்டுவசதி வாரியத்திடம் விண்ணப்பிக்கலாம்.
“தண்ணீர் தொட்டிகள் மிகவும் அவசியமாகும்,” என்று சுந்தராஜு மேலும் கூறினார்.
அதுமட்டுமின்றி, மாநில அரசு பினாங்கு அதிகபட்சம் 80% பராமரிப்பு நிதியம் (TPM80PP) எனப்படும் வீட்டுப் பராமரிப்பு நிதியுதவியை வழங்குகிறது. இம்மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகளுக்கான நிதியில் 80% மாநில அரசும், எஞ்சியுள்ள 20% நிதியை சம்பந்தப்பட்ட அடுக்குமாடி நிர்வாகம் மூலம் செலுத்தப்படும் என்று சுந்தராஜு பகிர்ந்து கொண்டார்.