வீட்டுவசதி வாரியத்தின் கீழ் முதல் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டம் நிர்மாணிக்கப்படும் – ஜெக்டிப்

Admin

பாயான் பாரு –  பினாங்கு வீட்டுவசதி வாரியம், அதன் முதல் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டத்தை புக்கிட் கெடுங், பாயான் பாருவில் தொடங்கவுள்ளது.

மாநில உள்ளாட்சி, வீட்டுவசதி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு  தலைவர் ஜெக்டிப் சிங் டியோ, இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

“தொடக்கத்தில், மாநில வீட்டுவசதி வாரியத்தின் கீழ்  சில வீடமைப்புத் திட்டங்கள்
செயல்படுத்த இலக்கு கொண்டேன்.  இருப்பினும், இத்திட்டம் புதிய தொடக்கமாகத் திகழும்,” என நம்பிக்கை தெரிவித்தார்.

“இந்த வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டத்தில், இரு அடுக்குமாடி கட்டிடத்தில்  18 மாடிகளுடன் 801 யூனிட் வீடுகள் மற்றும் 15 வணிகக் கடைகள் நிர்மாணிக்கப்படும்.

“நீச்சல் குளம், உடற்பயிற்சி மையம், கூடைப்பந்து மைதானம், தியான தளம் மற்றும் இதர அடிப்படை வசதிகளும் இத்திட்டத்தில் இடம்பெறும்.

“இது தனியார் மேம்பாட்டாளர்களின் வீடமைப்புத் திட்டத்திற்கு நிகராக இருப்பதை உறுதி செய்கிறது.

“பினாங்கு மக்களுக்கு தரமான வீடுகளை வழங்குவதே எங்களின் முதன்மை நோக்கமாகும்,” என பாயான் பாருவில் உள்ள தளத்தைப் பார்வையிட்ட பிறகு ஜெக்டிப் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

2030 ஆம் ஆண்டுக்குள் குறைந்த விலை, குறைந்த நடுத்தர விலை மற்றும் வாங்கும் சக்திக்கு உட்பட்ட 220,000 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும், இதுவரை 120,000 வீடுகள் கட்டியுள்ளதாகவும் ஜெக்டிப் விவரித்தார்.

மேலும், ஜெக்டிப் மத்திய அரசின் உதவிக்காக வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சர் டத்தோஸ்ரீ ரீசல் மெரிகன் நைனா மெரிகனுடன் தொடர்பு கொண்டதாகக் கூறினார்.

“வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் வீடமைப்புப் பராமரிப்புத் திட்டங்கள் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு  வழங்க சம்பந்தப்பட்ட அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

பினாங்கு வீட்டுவசதி வாரிய பொது மேலாளர் ஐனுல் ஃபாதிலா சம்சுடி இச்செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.