பட்டர்வொர்த் – பினாங்கு மாநில அரசாங்கம் ‘வீட்டு உரிமை 3.0+’ வீட்டு உரிமைத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் அறிவித்தார். இந்தக் கொள்கை வருகின்ற ஜனவரி,1 முதல் 2024 டிசம்பர்,31 வரை அமலுக்கு வரும்.
இந்த வீடமைப்புத் திட்டமானது, பினாங்கு மக்களுக்குச் சொந்தமாக வீடுகள், குறிப்பாக வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் வாங்க உதவுவதற்காக மாநில அரசின் முன்முயற்சி திட்டமாக அமைவதாக அவர் கூறினார்.
“பினாங்கு தீவில் குறைந்தபட்சம் 850 சதுர அடி பரப்பளவைக் கொண்ட ஒரு யூனிட்டுக்கு ரிம300,000 இலிருந்து ரிம270,000 ஆகவும், செபராங் பிறையில், ஒரு யூனிட்டுக்கு ரிம250,000 இலிருந்து ரிம225,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளுக்கான அதிகபட்ச விலையில் 10% குறைக்கப்பட்டுள்ளது.
“தனியார் துறை மேம்பாட்டாளர்கள் உட்பட போதுமான, தரமான மற்றும் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளை வழங்குவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், பினாங்கு வீடமைப்புத் துறை மூலம் மாநில அரசு, கொள்கைகள் மற்றும் தரநிலைகள் வழிகாட்டியைஅறிவித்துள்ளது.
பட்டர்வொர்த் அரேனா மாநாட்டு மற்றும் கண்காட்சி மையத்தில் நடைபெற்ற 2023 பினாங்கு வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் மற்றும் சொத்துடைமை கண்காட்சியில் கலந்து கொண்ட போது முதலமைச்சர் இவ்வாறு கூறினார். இந்த நிகழ்ச்சி பினாங்கு வீட்டுவசதித் துறை (LPNPP) நிறுவப்பட்டதிலிருந்து இரண்டாவது முறையாக நடத்தப்படுகிறது.
அண்மையில், டிசம்பர் 21 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்பு வழிகாட்டி, பினாங்கு மக்களுக்கு போதுமான மலிவு விலையில் வீடுகளை வழங்கும் இலக்கை அடைய, உள்ளூர் அரசாங்கங்களும் அரசாங்க நிறுவனங்களும் மிகவும் முறையான மற்றும் விரிவான முறையில் இணைந்து செயல்பட அனுமதிக்கும் என்று அவர் கூறினார்.
“அரசாங்கம் மற்றும் தனியார் துறை இரண்டும் இந்த வழிகாட்டியைப் பயன்படுத்தி பினாங்கின் ரியல் எஸ்டேட் தொழிலில் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று,” நம்பிக்கை கொள்கிறேன்.
மேலும், ஒவ்வொரு குடும்பமும் அல்லது தனிமனிதனும் தங்களுக்கென சொந்த வீட்டை வாங்குவதை உறுதி செய்வதற்காக, பினாங்கு வீட்டுவசதித் துறை வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புப் பிரிவில் பி2 வகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது 750 சதுர பரப்பளவு கொண்ட வீட்டிற்கு அதிகபட்ச விற்பனை விலையாக ரிம100,000-ஐ நிர்ணயித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் குடும்ப வருமானம் மாதாந்திரம் ரிம5,000-ம் பெறுநருக்கு மட்டுமே என பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
பி2 பிரிவு முன்முயற்சியானது ரிம3,500க்கு மிகாமல் இருக்கும் குடும்ப வருமானத்திற்கான பி பிரிவுக்கும் ரிம8,000க்கு மிகாமல் இருக்கும் சி1 பிரிவின் குடும்ப வருமானத்திற்கும் இடையிலான மாதாந்திர குடும்ப வருமான வரம்புக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க உதவுகிறது.
“பி2 பிரிவு வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டம் இருப்பதால், அதிகமான மக்கள், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகள் சொந்த வீடுகளை வைத்திருக்க உதவ முடியும்,” என்று மாநில அரசு நம்புகிறது.
“இந்த முயற்சி மலேசியா மடானி வீடமைப்புத் திட்டத்துடன் ஒத்துப்போகிறது. இது பினாங்கு ஒற்றுமை அரசாங்க 2023 வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான தொடர்ச்சியாகும்.
இந்தக் கண்காட்சியில் வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் சுந்தராஜு சோமு, பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், பினாங்கு மாநில வீட்டுவசதி வாரியத்தின் பொது மேலாளரின் பிரதிநிதி ஃபகுராஸி பின் இப்னு உமார் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பினாங்கு வீட்டுவசதி மேம்பாட்டு வாரியத்தின் தலைவரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தராஜு கூறுகையில், பினாங்கு வீட்டுவசதித் துறை முழுமைபெறாத தகவல்கள் காரணமாக விண்ணப்பதாரர்களுக்கு வீட்டுவசதி துறையின் வீடுகள் பெறுவதற்கான கடிதங்கள் சென்றடைய முடியவில்லை.
வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள், வீடு வாங்குவதற்கான வாய்ப்பை இழப்பதைத் தவிர்க்க, தங்கள் தகவல்களை விரைவில் புதுப்பிக்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.
இந்தக் கண்காட்சி இரண்டு நாட்களுக்கு பட்டவொர்த் அரேனா மாநாட்டு மற்றும் கண்காட்சி மையத்தில் டிசம்பர் 23 முதல் டிசம்பர் 24 வரை, காலை மணி 10.00 முதல் இரவு மணி 10.00 வரை காட்சிப்படுத்தப்படும்.