பினாங்கு மாநில அரசு பொது மக்களின் நன்மை கருதி 2017-ஆம் ஆண்டு வரவுச்செலவு திட்டத்தில் வெள்ள நிவாரணத் திட்டத்திற்காக ரிம220லட்சம் நிதி ஒதுக்கீடுச் செய்துள்ளது என உள்ளூராட்சி, போக்குவரத்து மற்றும் வெள்ள நிவாரண ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ் சட்டமன்ற தொகுப்புரையில் அறிவித்தார். இந்நிதி ஒதுக்கீடு பயன்படுத்தி நீர் பாசன மற்றும் வடிகால் துறை கால்வாய் மேம்பாடு, ஆற்று நதிக்கரை ஆழப்படுத்துதல் & விரிவுப்படுத்துதல், வடிகால் உள்கட்டுமான பராமரிப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும்.
மலேசிய அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியர் தனது ஆய்வு அறிக்கையில் பினாங்கில் ஏற்படும் வெள்ளப் பேரிடருக்கு பருவநிலை மாற்றம், கடல் நீர் மட்ட அதிகரிப்பு, நகரமயமாக்கல், மற்றும் நில பயன்பாடு மாற்றும் ஆகியவை முக்கிய காரணமாக விளங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களின் சமூகநலத்தில் மிகுந்த அக்கரை கொண்ட மாநில அரசு, பாசன மற்றும் வடிகால் துறை, பொதுப்பணி துறை, உள்ளூராட்சி மன்றம், மாவட்ட நில அலுவலகங்களுடன் இணைந்து வெள்ள நிவாரணத் திட்டத்தை மேற்கொள்ளப்படும். சுங்கை பினாங்கு வெள்ள நிவாரணத் திட்டத்திற்கு கூட்டரசு அரசாங்கத்திடம் கோரிய ரிம350 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் ரிம150 லட்சம் வழங்கப்பட்டது பாராட்டக்குரியச் செயலாகும் என்றார் சாவ் கொன் யாவ். இதன் மூலம் சுங்கை பினாங்கு நிவரணத் திட்டம் கூடிய விரைவில் மேற்கொள்ளப்பட்டு வெள்ளப் பேரிடர் தவிர்க்கப்படும்.
எனவே, மாநில அரசு 2017-ஆம் ஆண்டு தொடங்கி அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ஆறு மற்றும் கடற்கரை ஓரங்களின் தூய்மையை பாதுகாக்கும் பொருட்டு விழிப்புணர்வு பட்டறைகள நடத்தப்படும். இந்த விழிப்புணர்வு பட்டறைகள் சிறப்புடன் நடத்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என சாவ் தெரிவித்தார்.
பினாங்கு நம்பிக்கை கூட்டணி அரசு தேசிய முன்னணி தொகுதிகளுக்கு வெள்ள நிவாரண திட்டத்திற்கு நிதி வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்தார் ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ். கடந்த 2016-ஆண்டு மாநில அரசு மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டிலிருந்து சுங்கை அச்சே சட்டமன்ற தொகுதி நிவாரணத் திட்டத்திற்கு ரிம 1,389,567.80 வழங்கப்பட்டது தக்க சான்றாக அமைகிறது என்றார். இந்நிதியத்தைப் பயன்படுத்தி ஆச்சே ஆறு, ஊடாங் ஆறு, மற்றும் சுங்கை ஆச்சே தொகுதியில் வடிகால் அமைப்பு , நிவாரணத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
மாநில அரசு 2008-ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை வடிகாலமைப்புத் திட்டத்திற்கு ரிம15,318,080.00 வழங்கியிருப்பது பொதுநலத்தில் மிகுந்த அக்கரை கொண்டுள்ளதை காண்பிக்கிறது .