ஷான் ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடும் பொங்கல் விழா குடும்ப பாங்கான சூழலை உருவாக்குகிறது – தர்மன்   

    மலேசிய இந்து சங்கம் புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவை மகளிர் பிரிவு ஆதரவுடன் ஷான் ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் விழாவை கெபுன் பூங்கா சட்டமன்ற உறுப்பினர் ஜெசன் ஒங் அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார்.  

    இந்தப் பொங்கல் விழா நான்காவது ஆண்டாக ஷான் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் கொண்டாடுவதாக மலேசிய இந்து சங்க தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் தர்மன் தெரிவித்தார். மேலும் இவ்விழா வருடாந்திர நடவடிக்கையாகத் தொடர்ந்து கொண்டாடப்படும் என்றார். 

 

    “இந்தியர்களின் கலாச்சாரத்தைப் பறைச்சாற்றும் வகையில் கோலம் வரைதல், கருப்புச் சாப்பிடுதல் மற்றும் நடனம் ஆடுதல் ஆகியப் போட்டிகள் ஷான் இல்லக் குழந்தைகளுக்காகப் பிரத்தியேகமாக நடத்தப்பட்டன. வெற்றிப் பெற்ற குழந்தைகளுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன” என மவுன் எஃஸ்கிரின் வட்டாரத்தில் அமைந்துள்ள ஷான் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கூறினார்.   

    இந்நிகழ்வில் மாநகர் கழக உறுப்பினரும் இந்து அறப்பணி வாரிய ஆணையருமான திரு காளியப்பன் மற்றும் ஷான் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத் தலைவர் டத்தோ டாக்டர் பாலகிருஷ்ணன், ஆகியோர் கலந்து கொண்டார்.

    இந்து சங்க மகளிர் அணி ஷான் காப்பக குழந்தைகளுடன் இணைந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். 

    தொடர்ந்து பல ஆண்டுகளாக ஷான் ஆதரவற்ற குழந்தைகளுடன்  பொங்கல் விழா கொண்டாடும் மலேசிய இந்து சங்க பினாங்கு புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவையின் செயல் வரவேற்கத்தக்கது. 

“பொங்கல் விழா போன்ற கொண்டாட்டத்தின் வாயிலாக  இக்குழந்தைகள் சமூக உறுப்பினர்களுடன் தொடர்புக் கொள்ளவும் தன்னம்பிக்கை வளர்க்கவும் தூண்டுக்கோலாகத் திகழ்கிறது. மேலும், இம்மாதிரியான விழாக்கள் ஆதரவற்ற இல்லங்களில் நடத்துவதன் மூலம் அப்பிள்ளைகளும் குடும்பத்தாருடன் பண்டிகைக் கொண்டாடும் சூழல் நிலவுகிறது, என்றார்.