2012ஆம் ஆண்டு வரை ஏழு முறை அனைத்துலக ஸ்குவாஷ் பட்டத்தை வென்ற டத்தோ நிக்கோல் டேவிட்டுக்குப் பினாங்கு மாநில அரசு, பினாங்கு நீர் விநியோக நிறுவன ஆதரவுடன் ரிம 100 000 ஐ வழங்கியது. பினாங்கு மாநிலத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட டத்தோ நிக்கோல் டேவிட் உலகத் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருப்பது மிகவும் பாராட்டுக்கும் பெருமைக்கும் உரியது என்று மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இப்பாராட்டு நிதிக்கான மாதிரி காசோலையைப் பினாங்கு முதல்வரும் பினாங்கு நீர் விநியோக நிறுவனத் தலைவருமான மேதகு லிம் குவான் எங் வழங்கினார். மாநில அரசும் பினாங்கு நீர் விநியோக நிறுவனமும் இணைந்து விளையாட்டு அரங்கில் உலகத் தர சாதனைப் படைக்கும் அனைத்துப் பினாங்கு வாழ் வீரர்களுக்கும் அங்கீகாரம் வழங்குவது வெள்ளிடைமலையாகும். அதோடு இவ்விரு தரப்புகளும் பினாங்கு இளம் விளையாட்டாளர்களுக்கு ஊக்குவிப்பு வழங்குவதை தங்கள் கடமையாகக் கொண்டிருப்பதை புக்கிட் டும்பாரில் அமைக்கப்பட்டுள்ள ‘நிக்கோல் டேவிட் அனைத்துலக ஸ்குவாஷ் மையம்’, பறைசாற்றுகிறது என்று முதல்வர் லிம் புகழாரம் சூட்டினார்.
மேலும் பினாங்கு நீர் விநியோக நிறுவனம் ஸ்குவாஷ் விளையாட்டை மேம்படுத்தும் பொருட்டு ஸ்குவாஷ் திறன் மேலாண்மை, ஸ்குவாஷ் இளம் விளையாட்டாளர் திட்டம், பினாங்கு அனைத்துலக ஸ்குவாஷ் போட்டி என அனைத்திற்கும் ஆதரவு நல்குகின்றது குறிப்பிடத்தக்கது. மாநில அரசும் பினாங்கு நீர் விநியோக நிறுவனமும் வரும் 2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் ஸ்குவாஷ் போட்டியையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பின் முயற்சிக்கு முன் மொழிந்துள்ளது. ஸ்குவாஷ் விளையாட்டு ஒலிம்பிக் போட்டியில் இணைக்கபடுமானால் அது ஸ்குவாஷ் விளையாட்டுத் துறைக்கே கிடைத்த அங்கீகாரமாகும். அதுமட்டுமல்லாது, ஒலிம்பிக் போட்டியில் டத்தோ நிக்கோல் டேவிட் மூலம் மலேசியா முதல் தங்கப் பதக்கத்தைப் பெறுவதற்கான வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது என்றால் அது மிகையாகாது.
அண்மையில், நடைபெற்ற சிஐஎம்பி வங்கியின் பொது ஸ்குவாஷ் போட்டியின் அறையிறுதி சுற்றில் டத்தோ நிக்கோல் இங்கிலாந்தின் லோரா மசோராவிடம் தோல்வி கண்டார். எனினும் இத்தோல்வியினால் தாம் துவண்டு விடவில்லை என்றும் எதிர்வரும் மே மாதம் களமிறங்கவிருக்கும் பிரிட்டிஷ் பொது ஸ்குவாஷ் போட்டிக்குத் தீவிர பயிற்சி எடுத்துத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளவிருப்பதாகவும் மலேசிய விளையாட்டு ராணியான டத்தோ நிக்கோல் நம்பிக்கை தெரிவித்தார். அதற்காக, எட்டு முறை வெற்றியாளர் பட்டத்தை வென்றிருக்கும் ஆசிய ஸ்குவாஷ் போட்டியையும் தவிர்க்கவிருப்பதாகவும் கூறினார். பாதுகாப்புக் கருதி இப்போட்டியிலிருந்து விலகியிருக்கும் டத்தோ நிக்கோல் பிரிட்டிஷ் போட்டிக்கு இன்னும் சிறப்பாக தன்னைத் தயார் படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம். நிக்கோல் இப்போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்தி வெற்றியாளர் பட்டத்தை தட்டிச் செல்வார் என மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த உலகின் முதல் நிலை ஸ்குவாஷ் வீராங்கணை டத்தோ நிக்கோல் டேவிட்