புக்கிட் மெர்தாஜாம் – “எதிர்காலத்தில் மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் துறையில் வெற்றி நடைபோடுவதற்கு ஸ்தேம் விழா வழிவகுக்கிறது. அதுமட்டுமின்றி, முன்னாள் முதல்வர் வழிக்காட்டலில் அமைக்கப்பட்ட பினாங்கு ஸ்தேம் பள்ளி மாணவர்கள் குறிப்பாக நான்காம் படிவத்தில் அறிவியல் துறையைத் தேர்ந்தெடுப்பதற்கு ஊன்றுகோளாகத் திகழ்கிறது. இதன்மூலம் தொழிற்துறை புரட்சி 4.0-க்கு ஏற்ப பினாங்கு மாநிலத்தில் அதிகமான நிபுணத்துவம் மிக்க தொழிலாளர்களை உருவாக்க இயலும்,” என துங்கு பய்னூன் ஆசிரியர் பயிற்சி கல்லூரி அரங்கத்தில் நடைபெற்ற ஸ்தேம் விழாவின் நிறைவுவிழாவில் கலந்து கொண்டு முடிவுரை வழங்கிய பேராசிரியர் ப.இராமசாமி இவ்வாறு தெரிவித்தார்.
இந்த ஸ்தேம் விழா கடந்த நான்கு ஆண்டுகளாக மாநில கல்வி இலாகா தலைமையில் நடத்தப்படும் வேளையில் முதல் முறையாக பினாங்கு ஸ்தேம் இணை ஆதரவுடன் இவ்விழா இனிதே நடைபெற்றது பாராட்டக்குறியதாகும். இந்நிகழ்வு வருகின்ற ஆண்டுகளிலும் பினாங்கு கல்வி இலாகா மற்றும் பினாங்கு ஸ்தேம் இணைந்து நடத்தப்படுவதன் மூலம் மாநில அரசின் நல்லிணக்கத்தை பேண முடியும் என பினாங்கு ஸ்தேம் தலைவருமான இராமசாமி கூறினார்.
இந்நிகழ்வில் மாநில கல்வி இலாகா இயக்குநர் டாக்டர் மஹானும் மாட் சோம், துங்கு பய்னூன் ஆசிரியர் பயிற்சி கல்லூரி இயக்குநர் முகமது சாட் அப்பாஸ், பினாங்கு ஸ்தேம் 4.0 தலைமை நிர்வாக இயக்குநர் ரிச்சட் சுங் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு நடைபெற்ற ஸ்தேம் விழாவில் இடம்பெற்ற 18 போட்டிகளில் 1,300 ஆரம்பப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுடன் 700 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஐந்தாம் ஆண்டு மாணவர்களான வித்யா ஸ்ரீ, மஹாபெருமால், ஹாரிஷ், ஏஸ்வன், சர்வினா ஆகிய ஐவரும் குழு பிரிவில் புத்தாக்கக் கண்டுப்பிடிப்புப் போட்டியில் முதலாம் நிலைக்கான தங்க விருதை வென்று சாதனைப்படைத்தனர். கடந்த இரண்டு மாதங்களாக ஆசிரியர்களின் வழிக்காட்டலில் ‘Domestic hydroponic using harvested rainwater’ எனும் புத்தாக்கக் கண்டுப்பிடிப்பை ஆராய்ச்சிப்பூர்வாக உருவாக்கியதாக மாணவர்கள் முத்துச்செய்திகள் நாளிதழுக்கு அளித்தப்பேட்டியில் தெரிவித்தனர். மேலும், இக்குழுவினர் பூஜாங் வெளி அனைத்துலக அறிவியல் போட்டியில் கலந்து கொண்டு மூன்றாம் நிலை வெற்றி சூடியுள்ளனர். மேலும், இப்பள்ளியைச் சேர்ந்த கிஷன், மகேன், வினிஷா, தினேஷ் மற்றும் சுபாஷினி ‘Portable water filtration’ எனும் புத்தாக்கப் படைப்பின் மூலம் மற்றொரு தங்க விருதை இப்பள்ளிக்கு கொண்டு சேர்த்தனர்.
சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் ஸ்தேம் விழாவில் மூன்று போட்டிகளில் வெற்றி மகுடம் சூடியதை எண்ணி பெருமிதம் கொள்வதாக அப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு குணசேகரன் கூறினார். புத்தாக்கக் கண்டுப்பிடிப்புப் போட்டியில் இரண்டு தங்க விருதுகளும் ஒலிம்பியாட் கணிதப் போட்டியில் மூன்றாம் நிலை வெற்றியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இப்பள்ளியில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்தேம் கழகம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசியர் சங்கம் இணை ஆதரவுடன் வழிநடத்தப்படுவதாகக் கூறினார். இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் அனைத்துலக இளம் அறிவியலாளர் மாநாடு மற்றும் ஜாகார்த்தா, இந்தோனேசியா நாட்டில் நடைபெறவிருக்கும் இளம் அறிவியலாளர் போட்டியிலும் மாணவர்கள் கலந்து கொண்டு சாதனைப் படைப்பர் என எதிர்ப்பார்ப்பதாகக் கூறினார்.
ஸ்தேம் விழாவில் நடைபெற்ற ஒலிம்பியாட் கணிதப் போட்டியில் பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ருத்ரேஸ்வரன், 11 இரண்டாம் நிலை வெற்றியாளராகவும் சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த கிரித்திஷா,11 மூன்றாம் நிலை வெற்றியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாணவன் ருத்ரேஸ்வரன் சிறு வயது முதல் கணிதப் பாடத்தில் அதிக நாட்டம் கொண்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் தேசிய ரீதியில் கணிதப்போட்டிகளில் கலந்து கொண்டு சாதனைப் படைக்க இலக்கு கொண்டுள்ளதாகக் கூறினார்.