பினாங்கு அனைத்துலக மாநாடு மற்றும் கண்காட்சி மையம் (ஸ்பைஸ்) கட்டுமானப் பணி பிப்ரவரி மாதம் இறுதியில் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஸ்பைஸ் மேம்பாட்டுத் திட்டத்தை நேரில் சென்று கண்காணித்தப் பிறகு இதனைத் தெரிவித்தார் உள்ளூராட்சி, போக்குவரத்து மற்றும் வெள்ள நிவாரண ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ்.
சாவ் கொன் யாவ் கூறுகையில் இந்த கட்டுமானப் பணி ஏறக்குறைய ரிம330 லட்சம் செலவில் கட்டப்பட்டதாகவும் வருகின்ற மார்ச் மாதம் முதல் மாநாடு நடைபெறும் என இன்முகத்துடன் தெரிவித்தார்.
இந்த மாநாட்டு மையம் நவீன வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறிப்பிட்ட கால வரையறையில் மேம்படுத்தப்பட்டது ஏனெனில் பினாங்கு சுற்றுலா தளம் மட்டுமின்றி கூட்டங்கள், மாநாடு மற்றும் நிகழ்வுகள் ஏற்று நடத்தும் சிறந்த தளமாகும்.
இந்நிகழ்வில் பினாங்கு மாநகர் கழகத் தலைவர் டத்தோ பத்தாயா இஸ்மாயில், செயலாளர் இயோ துங் செங் கலந்து கொண்டனர்.
ஸ்பைஸ் கட்டுமானப் பணி இரண்டு பிரிவுகளை உள்ளடக்கியுள்ளன. முதல் பிரிவில் அனைத்துலக மாநாடு மையம் அமைக்கப்படுகிறது, அதே வேளையில் இரண்டாவது பிரிவில் நான்கு நட்சத்திரம் தரம் கொண்ட தங்கும் விடுதி ரிம330 லட்சம் செலவில் கட்டப்படும். இந்த தங்கும் விடுதி திட்டம் வருகின்ற 2019-ஆம் ஆண்டு முழுமைப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக சாவ் கூறினார்.
தற்போது ஸ்பைஸ் அருகில் அதிகமான சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அது குறித்து மாநில அரசாங்கம் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளவிருக்கிறது. பாயான் லெப்பாசில் நடைபெறும் சாலை போக்குவரத்து நெரிசலை சமாளிக்க சுரங்க பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார். மேலும் ரெலாவ் மற்றும் பாயான் லெப்பாஸ் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்து மாநகர் கழகம் கண்காணிக்கும் எனவும் கூடிய விரைவில் தீர்வுக்காணப்படும் என்றார்.