பாயா தெருபோங் – ரெலாவில் அமைந்திருக்கும் ஶ்ரீ சத்ய சாய் பாபா மையத்தின் கிடங்கு அண்மையில் ஏற்பட்ட பழத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனை கேட்டறிந்த புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் ஶ்ரீ சத்ய சாய் பாபா மையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
கடந்த ஒரு மாதம் காலத்திற்கும் மேலாக இக்கிடங்கு (warehouse) இடிந்து விழும் அபாயத்தில் இருந்தது. எனவே, இச்சாய்பாபா மையத்தின் அருகாமையில் அமைந்திருக்கும் மற்றொரு பகுதியில் மீண்டும் இக்கிடங்கு நிர்மாணிக்கும் பொருட்டு இக்கழகத் தலைவர் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியை நாடினார். இதனைப் பரிசீலிக்கும் வண்ணம் நாடாளுமன்ற உறுப்பினர் இவ்விடத்தை நேரில் சென்று பார்வையிட்டதோடு இப்புதிய கிடங்கு அமைக்க அவரின் நிதி ஒதுக்கீட்டில் இருந்து ரிம50,000 மானியத்திற்கான மாதிரி காசோலையை இந்த மையத்தின் தலைவர் திரு.இராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். மேலும், பாயா தெருபோங் சட்டமன்ற உறுப்பினரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான இயோ சூன் இன் ரிம10,000-கான காசோலை எடுத்து வழங்கினார்.
இதனிடையே, பாயா தெருபோங் வட்டாரத்தில் இதற்கு முன்பதாக நிறைய நிலச்சரிவு சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன; இவை அனைத்தும் மண்ணின் நிலைத்தன்மையினால் ஏற்பட்டவை; மேலும் இச்சாய் பாபா மையத்திற்கு மிக அருகாமையில் பிரதான சாலை அமைந்திருப்பதால் கிடங்கு இடிந்து விழும் நிலை ஏற்படும் போது அது சாலையில் பயணிப்பவரையும் பாதிக்கும் என செய்தியாளர்களிடம் விவரித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால். எனவே, பாதுகாப்பு அம்சத்தை கருத்தில் கொண்டு இந்தக் கிடங்கை இடம்பெயர்ப்பது மிக அவசியம் என சூளுரைத்தார்.
இன்று (9 ஏப்ரல்) தனது பிறந்த நாளை கொண்டாடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் அவர்களுக்கு ஶ்ரீ சத்திய சாய்பாபா மைய உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அனிச்சல் வெட்டி மாலை அணிவித்து பொன்னாடை போற்றி மரியாதைச் செய்தனர்.