சிம்பாங் அம்பாட் – பினாங்கு மாநிலத்தில் வீற்றிருக்கும் சுமார் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலய மண்டப நிலம் வாங்க நிதி திரட்டும் திட்டத்தின் அறிமுக நிகழ்ச்சியும் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டமும் இன்று நடைபெற்றது.
ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம் 130 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகவும் இந்த வட்டாரத்தில் உள்ள ஆலயங்களுக்குத் தாய் கோவிலாக விளங்குவதாகவும் அறியப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வருகையளித்த மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் வழிபாட்டு தலங்கள் இந்தியச் சமூகத்திற்கும் மட்டுமின்றி அனைவருக்கும் ஒரு முக்கியமான மத மற்றும் கலாச்சாரத்தைப் போற்றும் இடமாகத் திகழ்கிறது. இது சமூகத்தில் நல்லிணக்கத்தைப் பேணும் பிரதான தலமாகவும் அமைகிறது, என்றார்.
மேலும், இந்த ஆலயம் நிலப் பிரச்சனையை எதிர்நோக்கியிருந்தபோதும் அதன் சம்பந்தமாக நில உரிமையாளர் மற்றும் ஆலய நிர்வாகம் இடையிலான கலந்துரையாடல் நடத்தப்பட்டு சுமூகமானத் தீர்வுக் காணப்பட்டதை சாவ் வரவேற்றார்.
ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்தின் கட்டுமானப் பணிகளுக்கு மாநில அரசின் சார்பில் ரிம50,000-ஐ வழங்கவிருப்பதாக மாநில முதலமைச்சர் அறிவித்தார்.
“நிலங்கள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கீட்டை மாநில அரசு வழங்கக்கூடாது. மாறாக மேம்பாட்டுப் பணிகள் போன்ற பொது வசதிகளுக்கு வழங்கலாம். ஆகவே, அறிவிக்கப்பட்ட இந்நிதியுதவியை மேம்பாட்டுப் பணிகளுக்குப் பயன்படுத்தலாம்,” என சாவ் தமதுரையில் குறிப்பிட்டார்.
மாநில அரசு இந்தியச் சமூகத்தினர் எதிர்நோக்கும் ஆலய நிலப் பிரச்சனை, தமிழ்ப்பள்ளிகள் விவகாரம், சிறு வியாபாரம், வேலை வாய்ப்பு போன்றவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தும்.
பினாங்கு மாநிலத்தில் மக்களிடையே நல்லிணக்கம் மேலோங்கி அனைவரும் ஒற்றுமையாக மாநில வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் சாவ் சூளுரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு, பினாங்கு மாநில குற்றப்புலனாய்வு துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ புலவேந்திரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
சிறப்புரையாற்றிய டத்தோ ஸ்ரீ சுந்தராஜு, நிதித் திரட்டும் நிகழ்ச்சியின் வாயிலாக ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்தின் நிலத்தை வாங்க நிதி திரட்ட பக்கபலமாக இருக்கவிருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார். அதன் பிறகு, இந்த ஆலய மண்டபத்தை புதுப்பிக்க உதவிகளை நல்கவிருப்பதாக தமதுரையில் அறிவித்தார்.
இதனிடையே, ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்தின் நிலத்தை இலவசமாக வழங்கிய GUH மேம்பாட்டு தனியார் நிறுவனத்திற்கு தனது நன்றியை நவிழ்ந்தார். மேலும், மண்டபம் வீற்றிருக்கும் நிலத்தை வாங்க நிர்ணயிக்கப்பட்ட ரிம300,000-ஐ விலையை குறைக்க டத்தோ ஸ்ரீ சுந்தராஜு மேம்பாட்டாளரிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.