மாணவர்கள் இந்து சமயத்தின் கவசமாக இருக்க வேண்டும் – பேராசிரியர்

செபராங் ஜெயா – பினாங்கு மாநிலத்தின் இந்து அறப்பணி வாரியம், பினாங்கு இந்து அகடமி, மலேசிய இந்துதர்ம மாமன்றம் மற்றும் செபராங் ஜெயா அருள்மிகு கருமாரியம்மன் ஆலய இணை ஏற்பாட்டில் அடிப்படை அர்ச்சகர் பயிற்சி பட்டறை முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டது. ஐந்து நாட்களுக்கு நடைபெற்ற இப்பயிற்சி பட்டறையில் 58 மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றுள்ளதாக அருள்மிகு கருமாரியம்மன் ஆலயத் தலைவர் வழக்கறிஞர் அமரேசன் தமது வரவேற்புரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

மாணவர்கள் தீயச் செயல்களில் ஈடுப்படாமல் நெறியான வாழ்க்கை வாழ இந்தப் பயிற்சி பட்டறை முக்கிய பங்கு வகிக்கும் என மலேசிய இந்துதர்ம மாமன்றத் தலைவர் இராதாகிருஷ்ணன் தமதுறையில் குறிப்பிட்டார். இம்மாதிரியான சமயம் சார்ந்த நிகழ்வுகளை வழிநடத்த மாநில அரசு நல்கிய ஆதரவிற்கு தமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

அடிப்படை அர்ச்சகர் பயிற்சி பட்டறையை முன்னின்று வழிநடத்தி சிறுவர்களுக்கு நமது இந்து மத உபதேசங்களையும் மந்திரங்களையும் போதித்து ஓர் இந்துவாக வாழ கடைப்பிடிக்க வேண்டிய கோட்பாடுகளையும் வழிமுறைகளையும் ஆகம விதிகளையும் கற்று கொடுத்து அவர்களுக்கு கல்வி கண் திறந்து வைத்தார் நமது நாடறிந்த ‘வேத ஆகம ஞான பாஸ்கர்’ சிவ ஸ்ரீ அ.ப முத்து குமார சிவச்சாரியார்.

அடிப்படை அர்ச்சகர் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட மாணவருக்கு இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி சான்றிதழ் எடுத்து வழங்கினார்

இந்நிகழ்வின் நிறைவு விழாவில் பினாங்கு இந்து அறப்பணி வாரிய தலைமை நிர்வாகி டத்தோ இராமசந்திரன், மலேசிய இந்துதர்ம மாமன்றத் தலைவர் இராதாகிருஷ்ணன், மலேசிய பினாங்கு இந்துதர்ம மாமன்றத் தலைவர் நந்தகுமார் மற்றும் இந்து சமயப் பற்று கொண்ட நல்லுள்ளங்களும் கலந்து சிறப்பித்தனர்.

“மாணவர்கள் இந்து சமயத்தின் கவசமாக இருக்க வேண்டும்”, என தமதுரையில் குறிப்பிட்டார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி . இதனிடையே, நம் நாட்டில் இந்தியாவில் இருந்து அர்ச்சகர்களை கொண்டுவர ஆலய நிர்வாகங்கள் பல இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். இப்பிரச்சனைக்குத் தீர்வுக்காணும் நோக்கில் இப்பயிற்சி பட்டறை நடத்தப்படுகின்றது. நம் நாட்டிலேயே சிறந்த அர்ச்சகர்களை நாம் உருவாக்க முடியும் என பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் நம்பிக்கை தெரிவித்தார். திருவிழாக்கள், கும்பாபிஷேகம் போன்ற பெரிய சமய நிகழ்வுகளுக்கு இந்தியாவில் இருந்து அர்ச்சகர்களை கொண்டுவருவதை நிறுத்தி இங்குள்ள இளைஞர்களுக்கு வேத ஞானங்களை கற்பித்து இந்நிகழ்வுகளை வழிநடத்தவே பினாங்கு இந்து அகடமி உருவாக்கப்பட்டுள்ளதை தமதுரையில் குறிப்பிட்டார்.

 

மேலும், பெற்றோர்கள் பிள்ளைகளை நிபுணத்துவமிக்க தொழில் வகிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அர்ச்சகர் தொழிலையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தினார். அர்ச்சகர் தொழிலில் நல்ல வருமானம் ஈட்டப்படுவதோடு நெறியான மனிதப்பிறவியாக வாழ முடியும் என அவர் மேலும் சூளுரைத்தார். இந்நிககழ்வில் அனுபுவத்தை பகிர்ந்து கொண்ட மாணவர் ஹரிபிரசாத்
செல்வராஜ் இப்பட்டறை தமக்கு பயனுள்ளதாக அமைந்ததாகக்கூறினார். பெற்றோர்கள் அர்ச்சகர் தொழிலை குறைவாக மதிப்பிடாமல் தங்களது பிள்ளைகளை இத்தொழிலுக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், அர்ச்சகர் தொழில் செய்வதால் அவரின் படிப்பு பாதிக்கப்படவில்லை மாறாக கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க முடியும் என அவரது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

அடிப்படை சமய மற்றும் அர்ச்சகர் வகுப்புகளுக்கு வழிக்காட்டலாக அமைவதற்கு முறையான நூல் வடிவில் மந்திரங்கள் மற்றும் வழிபாடுகள் குறித்து அச்சிடுவதற்கு சிவ ஸ்ரீஅ.ப முத்து குமார சிவச்சாரியார் விடுத்த கோரிக்கைக்கு இந்து அறப்பணி வாரியம் பொறுப்பேற்கும் என அகம் மகிழத் தெரிவித்தார் பேராசிரியர் ப.இராமசாமி.