பாடாங் லாலாங் -ஒய்.தி.எல் அறக்கட்டளையின் ‘வீட்டிலிருந்து கற்றுக்கொள்’ எனும் திட்டத்தின் கீழ் பெர்மாத்தாங் பாவ் பகுதியைச் சேர்ந்த மொத்தம் 500 மாணவர்களுக்கு திறன்பேசிகள் மற்றும் இலவச இணையம் சேவை வழங்கப்பட்டது.
இத்திட்டம் தொற்றுநோய் காலத்தின் போது பி40 மாணவர்களின் இயங்கலை கற்றலுக்குத் தேவையான சாதனங்களை வழங்குவதற்காக தொடங்கப்பட்டது.
ஒய்.டி.எல் அறக்கட்டளை (ஒய்.டி.எல் கார்ப்பரேஷன் பெர்ஹாட்) உடனான கூட்டு முயற்சியில் ஈடுபட்டதற்காக பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இசா அன்வார் அவர்களை முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் பாராட்டினார்.
“இந்த கூட்டு முயற்சியின் வாயிலாக மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் நிதிச் சுமையை குறைக்க வழி வகுக்கிறது.
“பெர்மாத்தாங் பாவ் தொகுதி மாணவர்களுக்கு அவர்களின் கற்றல் கற்பித்தலில் உதவுவதற்காக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (எம்.சி.ஓ) அமல்படுத்தியலிருந்து ‘நாம் கற்போம்’ (Kita Belajar) என்ற திட்டம் போன்ற பிற முயற்சிகளையும் நூருல் இசா கொண்டு வந்ததை காண முடிகிறது.
“‘நாம் கற்போம்’ எனும் திட்டத்தின் கீழ் இலவச வீட்டுப்பாடம் அச்சிடும் சேவை, நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் ஆண்டுகளுக்கான இயங்கலை பிரத்தியேக வகுப்பு (Tuisyen Rakyat), ‘இணைய
டாப்-அப்’ மற்றும் ‘ஒரு மாணவர், ஒரு சாதனம்’ திட்டம் ஆகியவை அடங்கும்.
“இந்த முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுகள். பொது மக்களின் நல்வாழ்வுக்கு தொடர்ந்து சேவை செய்யுங்கள்,’’ என புக்கிட் மெர்தாஜாம், இங் யாம் ஹுவாட் அரங்கில் நடைபெற்ற திறன்பேசிகள் மற்றும் இலவச இணைய சேவை வழங்கும் விழாவின் போது சாவ் இவ்வாறு கூறினார்.
இந்த தொற்றுநோயின் தாக்கம் கற்றல் கற்பித்தல் மேற்கொள்ளும் முறையை மாற்றியுள்ளது என்று சாவ் கூறினார்.
“ஆசிரியர்களும் மாணவர்களும் இயங்கலை கற்றல் உள்ளடக்கிய மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் கற்றல் கற்பித்தல் தொற்றுநோய் தாக்கத்தால் தடையின்றி மேற்கொள்வதை உறுதி செய்கிறது.
“புதிய இயல்புக்கு ஏற்ப கல்வித் துறையில் உதவுவதற்காக ‘மின் கற்றல் கணினி திட்டம்’ பணிக்குழுவை அமைத்த முதன்மை மாநிலங்களில் பினாங்கு மாநிலம் இடம்பெறுகிறது.
“கடந்த ஆண்டு மே மாதம் உருவாக்கப்பட்ட இந்த பணிக்குழுவின் மூலம் 1,742 கணினிகள் மற்றும் 279 திறன்பேசிகள் தகுதியான மாணவர்களுக்கு விநியோகித்துள்ளது.
பினாங்கு தொடர்பு பெருந்திட்டத்தின் கீழ், மாநிலத்தில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மேம்படுத்துவதில் மாநில அரசு செயல்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
“இது தேசிய ஃபைபரைசேஷன் மற்றும் தொடர்பு திட்டத்தின் (என்.எப்.சி.பி) அம்சமாக விளங்குகிறது,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், ஒய்.தி.எல் கார்ப்பரேஷன் பெர்ஹாட் நிர்வாக இயக்குனர் சையத் அப்துல்லா சையத் அப்துல் காதிர் கூறுகையில், இலவசமாக வழங்கப்பட்ட திறன்பேசிகள் 12 மாத காலத்திற்கு இலவச 10 ஜிபி டேட்டா (மாதாந்திர இணைய சேவை) பொருத்தப்படும்.
மேலும், தகவல் தொடர்பு நிறுவனங்கள் முன்வந்து மாநிலத்தில், குறிப்பாக கிராமப்புறங்களில் இணைய இணைப்பை மேம்படுத்த உதவ வேண்டும் என்று நூருல் இசா நம்பிக்கை தெரிவித்தார்.