பெர்தாம் – பினாங்கில் 16 மற்றும் 17 வயதிற்குட்பட்ட 3,500 மாணவர்கள் இன்று பதின்ம வயதினருக்கான தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இத்திட்டம் வருகின்ற அக்டோபர்,3ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு மாணவர்களுக்குத் தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அண்மையில் அறிவித்தப்படி, 16 முதல் 17 வயது நிரம்பிய அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி
செப்டம்பர்,23 (இன்று) தொடங்கி காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாநிலத்தின் ஆறு தடுப்பூசி மையங்களில் போடப்படும்.
ஸ்பைஸ் மாநாட்டு மையம்; செபராங் ஜெயா,தாபா எக்ஸ்போ; வாங்கோ எமினென்ட் தங்கும் விடுதி; பெர்டா மாநாட்டு மையம்; மில்லினியம் அரங்கம் மற்றும் சுங்கை பாக்கப், செர்பாகுனா மையம் ஆகிய இடங்களில் இந்த ஆறு பி.பி.வி மையங்கள் செயல்படுகிறது.
தடுப்பூசி போடப்பட்ட அனைத்து மாணவர்களும் MySejahtera செயலியின் மூலம் சந்திப்பு நிலை ஒப்புதல் பெற்றுக்கொண்டனர், என மாநில இளைஞர் மற்றும் விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் சூன் லிப் சீ கூறினார்.
“தீவின் வடகிழக்கு மாவட்டத்தில் 16 மற்றும் 17 வயதுடைய 457 மாணவர்களுக்கும், தென்மேற்கு மாவட்டத்தில், 543 மாணவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டன.
இதற்கிடையில், பெருநிலத்தில் வடக்கு செபராங் பிறை மற்றும் மத்திய செபராங் பிறையில் தலா 1,000 மாணவர்களும், தெற்கு செபராங் பிறையில் 500 மாணவர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
“மொத்தமாக, 16 மற்றும் 17 வயது நிரம்பிய 3,500 மாணவர்கள் இன்று தங்கள் தடுப்பூசிக்கான முதல் மருந்தளவைப் பெற்றுள்ளனர்,” என இன்று கெபலா பத்தாஸில் உள்ள மில்லினியம் அரங்க பி.பி.வி மையத்திற்கு வருகையளித்த போது சூன் லிப் சீ இவ்வாறு கூறினார்.
கூடிய விரைவில் பள்ளிகள் திறக்கப்படுவதால், கோவிட் -19 தடுப்பூசிக்கு இதுவரை பதிவு செய்யாத 16 மற்றும் 17 வயதிற்குட்பட்ட பதின்ம வயதினர் உடனடியாகப் பதிவு செய்யுமாறு வலியுறுத்தினார்.
“சம்பந்தப்பட்ட அமைச்சு பினாங்கு மாநிலத்திற்கு தடுப்பூசி விநியோகத்தை தடையின்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் அதிகமானோர் தடுப்பூசி பெற வழிவகுக்கும்.
தடுப்பூசி போடப்பட்ட மாணவர்களை மட்டுமே மீண்டும் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்குமாறு மத்திய அரசுக்குப் பரிந்துரை விடுத்தார்.
“இதன் மூலம், மாணவர்களிடையே நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்கவும், அவர்களைப் பாதுகாக்கவும் இது சிறந்த வழியாகும்,” என்று சூன் கூறினார்.
இதற்கிடையில், ஸ்பைஸ் மாநாட்டு மைய பி.பி.வி-யின் இயக்குனர் டாக்டர் நோர்ஹாஷிமா இஸ்மாயில் தடுப்பூசி போடும் மாணவர்கள் தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் வருமாறு வலியுறுத்தினார்.
“மாணவர்கள் MySejahtera சந்திப்பு நிலை குறித்து சரிபார்த்தப் பின்பு தான் தடுப்பூசி பெற சம்பந்தப்பட்ட பி.பி.வி மையத்திற்கு வருகையளிக்க வேண்டும்.
மாநிலக் கல்வித் துறை (பள்ளி மேலாண்மை) துணை இயக்குநர் அப்துல் சையத் ஹுசைன் கூறுகையில், MySejahtera செயலியின் மூலம் சந்திப்பு நிலை ஒப்புதல் பெற்றவர்கள் பள்ளிகள் படிப்படியாகத் தொடங்குவதற்கு முன்பு தடுப்பூசி போட முன் வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
“இதுவரை ஏறக்குறைய 99% ஆசிரியர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது மற்றும் பல பள்ளிகள் கூடிய விரைவில் மீண்டும் திறக்கப்படும்,” என்று அவர் கூறினார்.
பள்ளிகள் மாணவர்களுக்கான பாதுகாப்பான இடமாக இருப்பதை உறுதி செய்வதற்கு 100% மாணவர்களும் தடுப்பூசி போட வேண்டும் என்று அப்துல் சைட் நம்பிக்கை தெரிவித்தார்.