ஜார்ச்டவுன் – உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு (GOTO) ஏற்பாட்டில் பினாங்கு மாநில அரசாங்கத்தின் இணை ஆதரவில் 11 வது முறையாக உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு ஸ்ரீ பினாங்கு அரங்கத்தில் மிக சிறப்பாக தொடக்க விழாக் கண்டது.
“மாநில அரசும், பினாங்கு மக்களின் சார்பாக உலகம் முழுவதிலுமிருந்து, குறிப்பாக தமிழ்நாடு, இந்தியா மற்றும் பிற தமிழ்ப் புலம்பெயர் சமூகங்களில் இருந்து பயணம் செய்த எங்கள் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பிரதிநிதிகளை நான் அன்புடன் வரவேற்கிறேன்.
“இந்தியாவிற்கு வெளியே முதன்முறையாக GOTO மாநாடு நடத்தப்படுவதால், இந்த ஆண்டுக் கூட்டம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இது GOTO அமைப்பிற்கு ஒரு மைல்கல் மட்டுமல்ல, பினாங்கு மாநில அரசாங்கத்திற்கும் ஒரு முக்கியமான தருணம், தமிழ்நாடு மற்றும் மலேசியாவிற்கும் மற்றும் பினாங்குக்கும் இடையிலான நீண்டகால பிணைப்பை வலுப்படுத்துகிறோம்!
பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் இந்த
உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டின் சிறப்பு மலர் வெளியீடு செய்து இவ்விழாவினை தொடக்கி வைத்து இதனைத் தெரிவித்தார்.
“எதிர்காலத்தில் இந்தியாவிற்கு குறிப்பாக தமிழ் நாட்டிற்கு பொருளாதாரம் மட்டுமின்றி இரு நாடுகள் இடையிலான உறவை வலுப்படுத்த மரியாதை நிமித்தம் வருகை அளிக்க இணக்கம் கொண்டுள்ளதாக,” முதலமைச்சர் கூறினார்.
GOTO Meet என்பது உலகெங்கிலும் உள்ள தமிழர்களை ஒன்றிணைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு முன்முயற்சி திட்டம் என்றும், இது போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் புவியியல் ரீதியாகவோ அல்லது கருத்தியல் ரீதியாகவோ நம் இரு நாட்டில் உள்ள தூரத்தை நம்மால் குறைக்க முடிகிறது என்று நான் நம்புகிறேன்.
பினாங்கு ஒரு துடிப்பான தமிழ் சமூகத்தின் தாயகமாக பெருமை கொள்கிறது. இது வளமான கலாச்சார பாரம்பரியம் வாயிலாக இந்நகரத்தை வடிவமைத்து வருகிறது. தமிழ் சமூகம், பிற இந்திய இனக்குழுக்களுடன் சேர்ந்து, பினாங்கின் வளர்ச்சிக்கு, குறிப்பாக வணிகம், மருத்துவம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.
பினாங்கு மாநில அரசு, பினாங்கு 2030 தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து, தமிழ் மற்றும் இந்தியச் சமூகத்தின் பங்குதாரர்களுடன் நெருக்கமாகப் பணிபுரிந்து அவர்களின் தற்போதைய வளர்ச்சிக்கு ஆதரவளிக்க உறுதியுடன் செயல்படுகிறது. நமது சமூகத்தின் அடையாளத்தைப் பேணுவதற்கும் வலுப்படுத்துவதற்கும் முக்கியமான தமிழ் மொழி, கலாச்சாரம், கல்வி மற்றும் சமூகத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம் என முதலமைச்சர் தெரிவித்தார்.
ஒரு சமூகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு வேகம், விவேகம், அறிவு மட்டுமே போதாது ஒற்றுமையே அதற்கு அடித்தளமாகத் திகழ்கிறது. நமது சமூகத்தின் முன்னேற்றத்திற்கு ஒற்றுமையே பலம் வேற்றுமை பலவீனம் என வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சூழுரைத்தார்.
“நாம் வாழ வந்த சமூகம் அல்ல ஆழ வந்த சமூகம் என்றும் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கு விடாமுயற்சி, உழைப்பு மற்றும் ஒற்றுமை முக்கியமானத் திறவுக்கோள் ஆகும். அதன் அடிப்படையில், உங்களின் கடுமையான உழைப்பினால், இந்த நாட்டில் நாம் பேரும் புகழும் செல்வமும் கொண்ட இனமாக வாழ வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், அவர் பேசுகையில், இந்த உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு, தமிழகத்திற்கும் மலேசியாவிற்குமான இரு வழிப் பயணத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் கூறினார்.
இன்றைய நிகழ்ச்சியில் பினாங்கு இரண்டாம் துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் டியோ,
சுற்றுலா மற்றும் படைப்பாக்கப் பொருளாதாரம் ஆட்சிக்குழு உறுப்பினர் வோங் ஹோன் வாய், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்து அறப்பணி வாரியத் தலைவருமான ஆர்.எஸ்.என் இராயர், நெகிரி செம்பிலான், செரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன், தான்ஸ்ரீ இரமேஷ், , செனட்டர் லிங்கேஸ்வரன்,பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில், பால் வளத்துறை அமைச்சர் இராஜகண்னப்பன்; இராமநாதப்புர நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி; GOTO தலைவர் செவக்குமார் மற்றும் இந்திய நாட்டிச் சேர்ந்த பல பேராளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், GOTO அமைப்பின் சாதனைத் தமிழன் விருதினை நமது நாட்டின் தொழிலதிபர் தான்ஸ்ரீ ரமேஷ், சாதனைத் தமிழச்சி விருதினை டாக்டர் சந்திரிக்கா மற்றும் அமிட் பார்கவ் அவர்களுக்கும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர். இந்த விருதுகளை மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் எடுத்து வழங்கினார்.