ஜாவி – “மாணவர்கள் எதிர்காலத்தில் நிபுணத்துவம் மிக்க பணியில் அமர்வதற்குக் கல்வி அடித்தளமாகத் திகழ்கிறது. எனவே, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க கூடுதல் கவனத்துடன் கல்வி கற்க வேண்டும்.
“மாணவர்கள் ஆரம்பப் பள்ளி முதல் சிறந்த கற்றல் கற்பித்தலை அணுகி இடைநிலைப் பள்ளி மற்றும் மேற்கல்வியைத் தொடர்வதற்குக் குறிப்பாக வசதிக் குறைந்த மாணவர்களுக்குத் தேவையான பள்ளி உபகரணங்கள், பட்டகைக் கணினி, மடிக் கணினிகள் கொடுக்கப்படுகின்றன. இதனை ஊன்றுகோலாகக் கொண்டு மாணவர்கள் கல்விகேள்விகளில் சிறந்த தேர்ச்சி அடைய வேண்டும்,” என ஜாவி சட்டமன்ற உறுப்பினர் இங் மோய் லாய் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குப் பற்றுச்சீட்டுகள் வழங்கும் நிகழ்ச்சியில் இவ்வாறு கூறினார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு முதல்
நேஷன் கேட் சொலுஷன் சென். பெர்ஹாட் நிறுவனம், பெருநிறுவன சமூகப் பொறுப்பு (சி.எஸ்.ஆர்) திட்டத்தின் கீழ் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குப் பற்றுச்சீட்டுகள் கொடுத்து வருகின்றன. ஜாவி தொகுதியைச் சேர்ந்த 5 தமிழ்ப்பள்ளிகளுக்கும் பள்ளி உபகரணங்கள் வாங்குவதற்கானப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.
அவை கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி (32); நிபோங் திபால் தமிழ்ப்பள்ளி (50); ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளி(30), சாங்காட் தோட்டத் தமிழ்ப்பள்ளி(23); பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி (15) என 150 பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் நேஷன் கேட் சொலுஷன் சென். பெர்ஹாட் நிறுவன,
வியாபார மேம்பாட்டு மேலாளர் டேவிட் லிம்; பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்.
“வசதிக் குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பள்ளி உபகரணங்கள் வாங்குவதற்கானப் பற்றுச்சீட்டு வழங்குவதன் மூலம் அவர்களின் சுமையைக் குறைக்க முடிகிறது,” என்று டேவிட் லிம் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, இந்நிறுவனம் கடந்த ஆண்டு மாணவர்கள் இல்லிருப்பு கற்றல் கற்பித்தல் மேற்கொள்வதற்குத் தட்டைக் கணினிகள்(tablet); இரவல் திட்டத்தின் கீழ் மடிக்ணினிகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாவி சட்டமன்ற உறுப்பினர் மாணவர்களுக்கு முகக் கவசம் மற்றும் காலுரைகளை அன்பளிப்பாக வழங்கினார்.
கடந்த இரு மாதங்களாக கோவிட்-19 தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் மாணவர்கள் தேசிய பாதுகாப்பு மன்றம்(எம்.கே.என்), மற்றும் மாநில கல்வி இலாகா நிர்ணயித்துள்ள நிர்வாக நடைமுறைகளை(எஸ்.ஓ.பி) பினற்றுவதை ஆசிரியர்கள் கண்காணித்து உறுதிச் செய்ய வேண்டும், என கேட்டுக் கொண்டார்.