13,876 சிறு தொழில் வணிகர்கள் மற்றும் அங்காடி வியாபாரிகள் ஊக்கத்தொகையை பெற்றனர்

Admin

டத்தோ கெராமாட் – கடந்த ஜூன் 18, வரை மொத்தம் 13,876 சிறு தொழில் வணிகர்கள் மற்றும் அங்காடி வியாபாரிகள் பினாங்கு மாநில பொருளாதார திட்டம் 1.0 மற்றும் 2.0 ஆகியவற்றிலிருந்து ரிம 500-ஐ ஊக்கத்தொகையாகப் பெற்றனர்.

சுமார் 22,050 சந்தை வியாபாரிகள், போக்குவரத்து மற்றும் வாகனத்தில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் ஆகியோரில் 63 விழுக்காட்டினர் ரிம6.94 மில்லியன் (61%) உதவித்தொகையை பெற்றதாக வீடமைப்பு, உள்ளூராட்சி மற்றும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் தியோ தெரிவித்தார்.

உதவித்தொகை பெறாத வியாபாரிகள் கூடிய விரைவில் இந்த நிதியுதவி பெறுவர் என ஜெக்டிப் நம்பிக்கைத் தெரிவித்தார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளூராட்சி அதிகாரிகள் (பி.பி.தி) பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு முன்வர வேண்டும் என்ற பிரதமரின் பரிந்துரைக்கு பதிலளிக்கும் விதமாக ஜெக்டிப் இவ்வாறு கூறினார்.

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சி.என்.ஐ நிறுவனம் 1,000 முகக் கவசங்களை அரசு சாரா இயக்கங்களுக்கு டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப் முன்னிலையில் நன்கொடையாக வழங்கினர்.

சி.என்.ஐ நிறுவனம் அதன் சமூகநல திட்டத்தின் (சி.எஸ்.ஆர்) மூலம் ஏறக்குறைய ரிம20,000 மதிப்புள்ள 1,000 முகக்கவசங்களை நன்கொடையாக அளித்தது. மேலும், நன்கொடை வழங்கப்பட்ட முகக் கவசங்கள் அனைத்தும் மறுமுறை
பயன்படுத்தக்கூடிய பொருளாகத் திகழ்கிறது.

பினாங்கு மாநிலத்தில் கழிவுகளைக் குறைக்கும் நோக்கத்தில் முகக் கவசங்களை மறுமுறை பயன்படுத்தும் வகையில் இந்நிறுவனம் தயாரித்துள்ளது.

ஜெக்டிப், மாநிலத்தில் உள்ள சிறு தொழில் வணிகர்கள் மற்றும் அங்காடி வியாபாரிகளுக்கு உதவும் வகையில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது என கூறினார். வணிக நடவடிக்கைகள் மீண்டும் மறுமலர்ச்சி பெற மாநில அரசு தொடந்து பல திட்டங்கள் அமல்படுத்தும் என்றார்.

“பினாங்கு மாநிலத்தை புத்துயிர் பெற, சிறு தொழில் வணிகர்கள் மற்றும் அங்காடி வியாபாரிகள் உடனடியாக வியாபாரம் தொடர அனுமதி வழங்கியுள்ளோம் என சுட்டிக்காட்டினார்.

“இதனிடையே, காலை சந்தை மற்றும் இரவுச் சந்தைகள் செயல்படுவதற்கு மீண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

மேலும், சிறு தொழில் வணிகர்கள் மற்றும் அங்காடி வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை மீண்டும் மேம்படுத்தி
மாநில பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும் என ஜெக்டிப் நம்பிக்கைத் தெரிவித்தார்.

“ஜூன் 29, நிலவரப்படி, ஒன்பது காலை சந்தைகள், இரவுச் சந்தைகள் (21) மற்றும் ரியா சந்தைகள் (4) உட்பட மொத்தம் 34 சந்தைகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில சந்தைகள் ஊராட்சி மன்றத்திலிருந்து ஒப்புதல் பெறும் தருணத்தில் உள்ளன,”என்று கூறினார்.