Admin

தாசெக் குளுகோர் – ஆயர் ஈத்தாம் டாலாம் கல்வி சார்ந்த வனப்பகுதி மற்றும் சுங்கை பிறை வழி ஆற்றில் பயணம் செய்தல் ஆகியவை பினாங்கு மாநிலத்தின் சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் வேளாண் சுற்றுலாத் துறையை மேம்படுத்த இணக்கம் கொள்ள வேண்டும் என்று மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறினார்.

“இந்த இரண்டு இடங்களும் உள்நாட்டு மற்றும் அனைத்துலக சுற்றுலாத் தலமாக உருமாற்றம் காணும் ஆற்றல் கொண்டுள்ளன.

“பெங்காலான் மச்சாங் மீனவர் ஜெத்தியிலிருந்து படகு மூலம் சுங்கை பிறையைச் சுற்றிப் பார்க்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

“செபராங் பிறை மாநகர் கழகம்(எம்.பி.எஸ்.பி) செபராங் பிறையில் வேளாண் சுற்றுலாவை மேம்படுத்த பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது,” என இன்று படகு மூலம் ஆயர் ஈத்தாம் டாலாம் கல்விச் சார்ந்த வனப்பகுதியை அடைந்தப்பின் இவ்வாறு கூறினார்.

இது தாசெக் குளுகோரில் முதல்வர் மேற்கொண்ட ‘ஜெலாஜா ❤️ பினாங்கு’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகத் திகழ்கிறது.

வடக்கு செபராங் பிறையில் உள்ள விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கிராம மக்களின் வாழ்வாதாரச் சூழலை நேரில் சென்று காண்பதற்கும் எதிர்காலத்தில் பல முன்னெடுப்புத் திட்டங்களைச் செயல்படுத்தவும் இந்தப் பயணத்தை மேற்கொண்டதாக முதல்வர் சாவ் கூறினார்.

ஆயிர் ஈத்தாம் டாலாம் கல்விச் சார்ந்த வனத்தை சுற்றியுள்ள 16 ஹெக்டேர் தண்ணீர் சதுப்பு நிலமானது பறவை ஆர்வலர்களிடையே நன்கு அறியப்படும் இடமாக அமைகிறது என்று சாவ் கூறினார்.

பினாங்கு வனவியல் துறை இயக்குனர் முஹம்மது ஈசார் யூசுப் கூறுகையில், புலம்பெயர்ந்த பறவைகளுக்கு இந்த வனப்பகுதி ஒரு ‘வசிப்பிடம்’, என்றார்.

“இங்கு வாரத்திற்கு சுமார் 1,000 பார்வையாளர்கள் வருகையளிக்கின்றனர், குறிப்பாக செப்டம்பர் முதல் நவம்பர் வரை பறவைகள் இடம்பெயர்ந்த காலத்தில் அதிகமானப் பார்வையாளர்களை இங்குக் காணலாம்.

“இந்தக் கல்வி வனப்பகுதி மலேசியாவில் பறவைகளைக் கண்காணிப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமான 10 இடங்களில் ஒன்றாகும். சூரிய உதயத்தைப் பார்ப்பதற்கும் இது ஒரு சிறந்த இடம் என்றால் மிகையாகாது.

“பார்வையாளர்கள் எழில்மிகு இயற்கை வளத்தை இங்கு அனுபவிக்கலாம். 1.6 கி.மீ நடைப்பயணத்தை மேற்கொள்வதோடு 210 மீட்டர் தொங்கு பாலத்தை அனுபவிக்கலாம்,” என்றார்.

இந்நிகழ்ச்சியில், முதல்வரின் துணைவியார் தான் லீன் கீ, சட்டமன்ற உறுப்பினர் தேய் லாய் ஹெங், வடக்கு செபராங் பிறை மாவட்ட அதிகாரி சுல்கிப்லி ரஷித் மற்றும் சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி லேய் ஹொக் பெங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.