Admin

பிறை – பத்து காவான் நாடாளுமன்ற வேட்பாளரான முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் இன்று பிறை தொகுதியில் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது
சுற்றுவட்டாரத்தில் உள்ள வியாபாரிகள் மற்றும் குடியிருப்பாளர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.

பத்து காவான் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் நான்காவது நாளான இன்று முதல்வருடன் இணைந்து இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி; பெங்காலான் கோத்தா சட்டமன்ற உறுப்பினர் டேனியல் கூய் மற்றும் செபராங் பிறை மாநகர் கழக(எம்.பி.எஸ்.பி) கவுன்சிலர் டேவிட் மார்ஷல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பத்து காவான் நாடாளுமன்ற தொகுதியின் கீழ் இருக்கும் பிறை, புக்கிட் தம்பூன், புக்கிட் தெங்கா ஆகிய மூன்று தொகுதிகளிலும் இருக்கும் பல இடங்களுக்குத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாக முதல்வர் கூறினார்.

“மக்களின் குரல்களைக் கேட்பதற்கும், தேர்தல் தொடர்பாக அவர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகளைக் கேட்பதற்கும் தொடர்ந்து பத்து காவான் நாடாளுமன்றத்தின் கீழ் இருக்கும் பிற தொகுதிகளுக்கும் செல்வோம்.

“தேர்தல் பிரசாரத்தில் பொது மக்களிடையே அமோகமான வரவேற்பு கிடைக்கிறது,” என்று இந்திராவாசி உணவு வளாகத்தில் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது சாவ் இவ்வாறு கூறினார்.

கோலா ஜூரு பிரச்சாரத்தின் போது, ​​உள்ளூர் மக்கள் பல பிரச்சனைகளை முன்வைத்தனர்.

“எங்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட பிரச்சனைகளில், சமூகநலத்திட்ட உதவிகள், கூரைப் பழுதுபார்த்தல், நில விவகாரங்கள் உட்பட சில பிரச்சனைகள் முன் வைக்கப்பட்டன.

“சேவை மையங்கள் மற்றும் கிராம சமூக மேலாண்மை கழகங்கள் (MPKK) இந்த புகார்கள் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

வாரிசான் வேட்பாளர் ஓங் சின் வென் அறிக்கைக்குப் பதிலளித்த சாவ், ஒரு முதலமைச்சராக தனது பொறுப்பு பத்து காவான் உட்பட முழு பினாங்கு மாநிலத்தையும் பராமரிப்பதாகும், என்றார்.