15வது பொதுத் தேர்தலில் நாட்டை மீட்டெடுக்க முற்படுவோம் – சாவ்

Admin

பிறை – பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரான சாவ் கொன் இயோவ், பினாங்கு வாழ் மக்கள் அனைவரும் 15வது பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பினை நன்கு பயன்படுத்தி இந்நாட்டை மேம்படுத்தவும், மீட்டெடுக்கவும், மீட்சிப் பெறவும் அழைப்பு விடுத்தார்.

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியைப் போல இந்நாடும் தோல்வி அடையும் நிலைக்குத் தள்ளப்படுவதைத் தடுப்பதோடு, அடுத்த தலைமுறையினரின் எதிர்காலத்திற்காக மலேசியாவை மீட்டெடுத்து மீட்சிப்பெற செய்வது பொது மக்களின் கடமை என்று அவர் கூறினார்.

“15வது பொதுத் தேர்தல் மலேசியர்களுக்கு நமது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக தேசிய முன்னணி அரசாங்கத்திடம் இருந்து நமது நாட்டை மேம்படுத்தவும், மீட்டெடுக்கவும், மீட்சிப்பெறவும் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

“எனவே, இலஞ்ச ஊழல் அற்ற ஆட்சியை அமைக்கவும், மேலும் இந்த நாட்டின் குடிமக்கள் என்ற வகையில் நமது கண்ணியத்தை மீட்டெடுக்கவும் முடியும்,” என்று அவர் பத்து காவான் நாடாளுமன்ற சேவை மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வலியுறுத்தினார்.

மேலும், பிறை மாநில சட்டமன்ற உறுப்பினர் இரண்டாம் துணை முதல்வர், பேராசிரியர் டாக்டர். ப.இராமசாமி; புக்கிட் தெங்கா சட்டமன்ற உறுப்பினர், கூய் சியாவ்-லியுங், புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினர், கோ சூன் ஐக் மற்றும் பத்து காவான் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் இயக்குநர் டேவிட் மார்ஷல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இளம் வாக்காளர்களை அணுக பக்காத்தான் ஹராப்பான் (PH) மேற்கொண்ட முயற்சிகள் குறித்து கருத்து தெரிவித்த கொன் இயோவ், சமூக ஊடக தளங்களில் தகவல் பதிவேற்றம் உட்பட இளைஞர்களுடன் பல அமர்வுகளை தனது கட்சி ஏற்பாடு செய்துள்ளதாக கூறினார்.

“இளம் வாக்காளர்கள் மலேசியாவின் புதிய தலைமுறையே தவிர, 1990களின் பிற்பகுதியில் இருந்த சீர்திருத்த தலைமுறை அல்ல. எனவே, அவர்கள் சமூக ஊடகம் மூலம் தகவல்களைப் பெறுவதில் ஆர்வம் கொள்கிறார்கள். சமூக ஊடகங்களின் பங்கு மிகவும் முக்கியமானது.

“இந்தச் சந்தர்ப்பத்தில், இளம் வாக்காளர்களுக்கு ஒரு தெளிவான செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் நமது நாட்டை மீட்டெடுப்பதிலும் மீட்சிப் பெற செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

“நாட்டின் எதிர்காலம் பற்றிய விவகாரங்களில் இளைஞர்கள் கூடுதல் தீவிரம் காட்ட வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

இளைஞர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான மாநில அரசின் திட்டங்கள் குறித்து கருத்துரைத்த அவர், பினாங்கில் வேலை வாய்ப்பு பற்றாக்குறையை அனுபவிக்கவில்லை, மாறாக தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சனையை எதிர்கொள்கிறது என்று கூறினார்.

“பெரும்பாலான தொழில்துறை நிறுவனங்கள் திறமையான தொழிலாளர்களைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக புகார் அளிக்கின்றன, குறிப்பாக மின்சாரம் மற்றும் மின்னணுவியல் (E&E) மற்றும் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (SMI) ஆகியவை அதில் அடங்கும்.

“இம்மாநிலத்திற்கு திறன் மிக்க தொழிலாளர்களை நிலைத்திருக்கச் செய்வதற்கும் வெளியில் இருந்து மனிதவளத்தை ஈர்ப்பதற்கும் மிகுந்த சவாலை எதிர்நோக்குகிறோம். எனவே, மாநில மற்றும் மத்திய அரசு நிறுவனங்களும் இந்த சிக்கலை சமாளிக்க தனியார் துறை, கல்வியாளர்கள் மற்றும் பள்ளிகளுடன் ஒத்துழைப்பு நல்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.