ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்ட இலகு இரயில் போக்குவரத்து (எல்.ஆர்.டி) சேவையின் செயலாக்க முறை மற்றும் அதன் நிலையங்களின் இருப்பிடம் மற்றும் இடைவெளி போன்ற தொழில்நுட்ப விவரங்கள் போக்குவரத்து அமைச்சின் இறுதி முடிவுக்காக காத்திருக்க வேண்டும் என்று உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் இலக்கவியல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜைரில் கிர் ஜோஹாரி கூறினார்.
நவம்பர்,21 அன்று நடைபெற்ற 15வது பினாங்கு மாநில சட்டமன்றத்தின் முதலாம் தவணை இரண்டாவது கூட்டத்தின் வாய்மொழி கேள்வி மற்றும் பதில் அமர்வில் பெனாந்தி சட்டமன்ற உறுப்பினர் சுல்கெப்லி பாக்கரின் எழுத்துப்பூர்வ கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
“தற்போது, எல்.ஆர்.டி திட்டத்தின் செயல்பாட்டு முறை மற்றும் தொழில்நுட்ப விவரங்கள், அதாவது எல்.ஆர்.டி நிலையங்களின் இடைவெளி மற்றும் இருப்பிடம் குறித்த முழுமையான விபரங்கள் பெற போக்குவரத்து அமைச்சின் முடிவுக்காக காத்திருக்கிறோம்.
“எனவே, இத்திட்டத்தின் நிதி ஒதுக்கீடு மற்றும் செயல்பாட்டு முறை மற்றும் திட்டத்தின் தொடக்க தேதி ஆகியவை போக்குவரத்து அமைச்சின் முடிவைப் பொறுத்தது,” என்று தஞ்சோங் பூங்கா சட்டமன்ற உறுப்பினருமான ஜைரில் கிர் ஜோஹாரி விளக்கமளித்தார்.