அண்மையில் நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தான் ஶ்ரீ நோ ஒமார் அறிவித்திருந்த வீடமைப்பு மேம்பாட்டாளர்கள் வீடு வங்குநருக்கு கடனுதவி வழங்க முடியும் என்றும் அதற்கான வட்டி விகிதம் 18% நிர்ணயிக்கலாம் என்றும் அறிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ.
இம்மாதிரியான கடனுதவி வட்டி விகிதத்தின் வழி பொதுமக்கள் அளவுக்கு அதிகமான கடன் சுமைக்கு தள்ளப்படுவர். பினாங்கு மாநில அரசு பினாங்கு வாழ் மக்கள் சொந்த வீடு பெறும் கனவை நனவாக்கும் முயற்சியில் களம் இறங்கியிருக்கும் வேளையில் இம்மாதிரியான அறிவிப்பு முறையானது அல்ல என மேலும் அவர் சாடினார். வங்கிகளில் வீட்டு கடனுதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் அதிகமாக நிராகரிக்கப்படுவதற்கு அமைச்சு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர பொதுமக்களை அதிகமான கடன் சுமைக்கு தள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொண்டார்.
இப்பிரச்சனைக்கு தீர்வுக்காணும் பொருட்டு திரு. ஜெக்டிப் சம்மந்தப்பட்ட அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மேம்பாட்டாளர் வட்டி விதிக்கும் திட்டம் 2014, (Developer Interest Bearing Scheme (DIBS)) நிறுத்தப்பட்டதை தொடர்ந்து வீட்டு விண்ணப்பதாரர்கள் 100% வீட்டு கடனுதவி கொடுத்து அதனை திரும்பச் செலுத்தும் கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே, அக்கடிதத்தில் மலேசியா முழுவது உள்ள வீடமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர்கள், தேசிய வங்கி, மத்திய வங்களுடன் கலந்துரையாடல் நடத்த சந்திப்புக் கூட்டம் ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதன்வழி கருத்துகள் பரிமாறப்பட்டு வங்கிகளில் வீட்டு கடனுதவி நிராகரிக்கப்படுவதற்கு தீர்வுக்காண இலகுவாக இருக்கும் என செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார் திரு.ஜெக்டிப்.