ஜூலை 4-ஆம் தேதி பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இரத்த தான மூகாம் கொம்தாரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். இந்நிகழ்வு பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தோடு இணைந்து அரசாங்க விளையாட்டு மற்றும் பொதுநல சேவை, முன்னாள் மாணவர்கள் சங்கம் (MRSM-ANSARA), செபெராங் ஜெயா மற்றும் பினாங்கு பொது மருத்துவமனை துணைபுரிந்தனர்.
இப்பிரச்சாரத்தின் கருப்பொருள் “இரத்தம் கொடுத்து வாழ்க்கை கொடுங்கள்” என்பதாகும். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக விவசாய, சுகாதார மற்றும் கிராம மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் அஃபிப் பஹருடின் கலந்து கொண்டு வரவேற்புரையாற்றினார். மதிப்பிற்குறிய டாக்டர் அஃபிப் பஹருடின் உரையாற்றுகையில் இந்நிகழ்வு இரத்த வங்கியை நிரப்ப உதவுவதோடு இரத்த தானத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கவே நடத்தப்படுகிறது என்றார். அதோடு, விடுமுறை காலத்தில் இரத்த வங்கியில் போதுமான இரத்தம் இருப்பதை உறுதிச்செய்வது அவசியமாகும். ஏனெனில், விடுமுறை காலங்களில் அதிகமான விபத்துகள் ஏற்படுவதால் இரத்தப் பற்றாக்குறை நிலவுகிறது. மேலும், அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதற்கும் இரத்த தானம் முக்கிய பங்காற்றுகிறது என எடுத்துரைத்தார்.
ஆறாவது முறையாக நடைபெறும் இந்த இரத்த தான மூகாம் பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் பாராட்டக்குரியச் செயலாக வித்திடப்படுகிறது. அனைத்து சமூகத்தினரும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது இரத்தத் தானம் செய்வதைக் கடமையாகக் கருதி மனிதர்களின் உயிர்களைக் காப்பாற்றுவோம்.