ஜூரு – கடந்த 2008-ஆம் ஆண்டு நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் பினாங்கு மாநிலத்தில் ஆட்சி அமைத்த நாள் முதல் இன்று வரை வழிபாட்டு தலங்கள் உடைக்கப்படாமல் பாதுகாக்கப்படுகிறது.
“பினாங்கு மாநில அரசாங்கம் கடந்த 15 ஆண்டுகளாக வழிபாட்டு தலங்கள் இடிக்கக்கூடாது மாறாக பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கொள்கையைப் பறைச்சாற்றி வருகிறது,” என மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் ஜூரு, ஸ்ரீ மகா தேவி கருமாரியம்மன் ஆலயத்திற்கு வருகையளித்த போது இவ்வாறு கூறினார்.
ஸ்ரீ மகா தேவி கருமாரியம்மன் ஆலயத்திற்கு நேரடியாகச் சென்று ஆலய நிர்வாக உறுப்பினர்களைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி கொள்வதாகவும், மாநில அரசாங்கம் வழிபாட்டு தலங்கள் மேம்பாட்டுக்குத் தொடர்ந்து துணைபுரியும் என்று கூறினார்.
“வழிபாட்டு தலங்கள் அமைந்திருக்கும் பகுதிகளில் மேம்பாட்டுத் திட்டம், நிலப் பிரச்சனை போன்ற பிரச்சனைகள் எழும் போது மாநில அரசாங்கம் அதற்கான சுமூகமானத் தீர்வைக் காண்கிறது. இல்லையெனில், இது பினாங்கில் இணக்கமான மற்றும் பன்முக கலாச்சார சூழலை பாதிக்கும்,” என முதல்வர் விளக்கமளித்தார்.
மாநில அரசாங்கம் பல ஆலய நிலப் பிரச்சனைகளை TOL எனும் தற்காலிகமாக குறிப்பிட்ட நோக்கத்திற்காக நிலத்தை ஆக்கிரமிப்பதற்கான உரிமம் மூலம் தீர்வுக் காண்கிறது, என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி; தேவி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் கீழ் இந்திய சமூக மேம்பாட்டுக்குச் சிறந்த சேவையாற்றி வருகிறார் என முதல்வர் பாராட்டுத் தெரிவித்தார்.