பினாங்கு மாநில வாடகைக் கார் ஓட்டநர்களின் சேவையும் பங்களிப்பும் அங்கீகரிக்கும் வகையில் மாநில அரசு 2013-ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் ஊக்கத்தொகையாக தலா ரிம600-ஐ வழங்குகிறது. 2016-ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவனை ஊக்கத்தொகையைப் பெற்றுக்கொள்ள 2,396 வாடகைக்கார் ஓட்டுநர்கள் தகுதி பெற்றனர். கடந்த 30-ஆம் திகதி மே மாதம் பினாங்கு தீவுப்பகுதியில் 1,786 ஓட்டுநர்களும், 31-ஆம் திகதி 610 ஓட்டுநர்கள் பெருநிலப்பகுதியிலும் பெற்றுக் கொண்டனர். 2013-ஆம் ஆண்டு தொடங்கி மாநில அரசு ஊக்கத்தொகை வழங்குவதற்காக ரிம4,662,900.00-ஐ நிதி ஒதுக்கீடு செய்துள்ளது எனத் தெரிவித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
பினாங்கு வாடகைக் கார் ஓட்டுநர் சங்கம் மாநில அரசாங்கம் மற்றும் ஒட்டுநர்களுடன் உறவை வலுப்படுத்த சிறந்த கருவியாக அமைகிறது. இச்சங்கத்தின் துணையுடன் பினாங்கு வாடகைக் கார் ஓட்டுநர்கள் சிறந்த மற்றும் பாதுகாப்பான சேவையை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றார். பினாங்கு மாநிலத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த சிறந்த ஊடகமாகத் திகழ்வது வாடகைக்கார் ஓட்டுநர்களே எனப் புகழாறம் சூட்டினார் முதல்வர்.
30 வருட காலமாக வாடகை ஓட்டுநராகப் பணிப்புரியும் திரு.கனேசன், 59 இந்த ஊக்கத்தொகையைக் கொண்டு வாகன சாலை வரி மற்றும் காப்புறுதி செலுத்த இலகுவாக இருக்கும் என்றார். வாடகை கார் ஓட்டும் தொழிலானது மன அழுத்தமற்ற, சுதந்திரமாக செயல்படுத்த துணைபுரிகிறது என திரு குணா,40 தெரிவித்தார். மேலும் மாநில அரசிற்கு தனது மனமார்ந்த நன்றி மாலையும் சூட்டினார்.