உலகலாவிய நிலையில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இப்பிரச்சனையைக் களையும் முயற்சியில் பினாங்கு மாநிலத்தில் சிகரெட் புகையற்ற பினாங்கு மாநிலம் (PENBAR) என்ற பிரச்சாரம் அமலுக்கு வரவுள்ளது. இத்திட்டம் வரும் 1 ஜனவரி 2014-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் சமூகம், பொதுநலம் மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினரும் சுங்கை புயு சட்டமன்ற உறுப்பினருமான பீ புன் போ அவர்கள். ஜோர்ச்டவுன் யுனெஸ்கோ உலக பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் அமலுக்கு வருகின்றது.
இத்திட்டம் பினாங்கு மருத்துவ கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் அப்துல் ரசிட் கான் அவர்களின் ஆய்வின் கண்டுபிடிப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் 90%-க்கும் மேலாக பதிலளித்தவர்கள் பரிந்துரைத்த சிகரெட் பிடிப்பவர்களுக்கு ஒரு தனித் தளத்தை அமைக்க வேண்டும் என்ற கூற்றை ஆதரித்துள்ளனர். இத்திட்டத்தின் தலையாய நோக்கம் புகைப்பிடிக்காதவர்களை இந்த சிகரெட் புகையிலிருந்து பாதுகாக்க ஒரு முழு படையை அமைத்துள்ளதே ஆகும்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் பீ புன் போ அவர்கள் இந்த புகைப்பிடிக்கும் பழக்கத்தால் அருகில் இருக்கும் பலரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். அவர்களை காப்பாற்றவே இம்முயற்சியை மாநில அரசு எடுத்துள்ளதாகக் கூறினார். சிகரெட் புகைப் பிடிப்பவர்கள் உணவகங்கள், மருத்துவமனை வளாகம், பள்ளிக்கூட வளாகம், வழிப்பாட்டு தளங்கள் போன்ற இடங்களில் புகைப் பிடிப்பதை உடனடியாக நிறுத்தும்படி கேட்டுக் கொண்டார். அவர்களுக்கென தனி புகைப்பிடிக்க திறந்த வெளி தளங்கள் கட்டி கொடுக்க தயாராகவுள்ளதாகக் கூறினார். அதோடு, பொதுமக்களும் உணவகங்களில் யாரேனும் சிகரெட் பிடிப்பதைக் கண்டால் அதை சகித்து கொண்டு அமைதியாக இல்லாமல் உடனடியாக சம்மந்தப்பட்ட நபரிடம் இங்கு புகை பிடிக்கக்கூடாது என்பதை உடனுக்குடன் நினைவுக்கூறுமாறு வேண்டுகோள் விடுத்தார். இதன்வழி, புகைப் பிடிப்பவர்களிடத்தில் விழிப்புணர்வை உருவாக்க முடியும் என்றார். இதனிடையே, பள்ளிக்கூட அருகில் உள்ள வியாபாரிகள் 18 வயதுக்குக் கீழ்ப்பட்ட மாணவர்களுக்கு சிகரெட் துண்டுகளை விற்பதைக் கண்டித்தார். அவ்வியாபாரிகளை தமது கடந்த ஆறு மாதக் கால ஆய்வில் கண்டுப்பிடித்துள்ளதாகவும் 2014-ஆம் ஆண்டுக்கானப் பள்ளி தவணை தொடங்கியதும் இப்பழக்கத்தை கைவிடுமாறு கடிந்து கேட்டுக் கொண்டார்.
அதோடு, சிகரெட் புகையற்ற பினாங்கு மாநிலமாக உருமாற்றும் முயற்சியில் பினாங்கு மாநில செபெராங் பிறை நகராண்மைக் கழகத்தில் 27 சிறப்பு அதிகாரிகளும், பினாங்கு நகராண்மைக் கழகத்தில் 18 சிறப்பு அதிகாரிகளும் பணியில் அமர்த்தப்படவுள்ளனர். இவர்கள் பொதுமக்கள் உலாவும் இடங்களில் சிகரெட் பிடிப்பதைக் கண்டால் கண்டிக்கும் அதிகாரமும் தேவைப்பட்டால் சம்மன் வழங்கும் அதிகாரமும் இவர்களுக்கு இருக்கிறது என்பதைத் தெளிவுப்படுத்தினார். இவர்களுடன் பினாங்கு மாநில சுகாதார துறையின் கீழ் 180 அதிகாரிகள் இத்திட்டத்திற்காகப் பணியாற்றுவர். இதன்வழி, பினாங்கு மாநிலத்தில் காற்று தூய்மைகேட்டை குறைத்து மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. அதோடு, பினாங்கு வருகை ஆண்டு 2015 முதல் 2017-வரை வெற்றிகரமாக வழிநடத்த முடியும் என்றார்.
சிகரெட் புகையற்ற பினாங்கு மாநிலம் (PENBAR) பிரச்சூரங்களை தமிழ், மலாய், சீனம் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பினாங்கு மாநிலத்தில் ஆங்காங்கே பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். அதோடு, பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் இந்தப் பிரச்சூரம் பார்வைக்கு வைக்கப்படும். இதன்வழி, பினாங்கு மாநிலத்திற்கு வரும் சுற்றுப்பயணிகளும் இத்திட்டத்தை கடைப்பிடிபர் என்பது நிரூபனமாகிறது. இந்தச் சந்திப்பில் வேளாண்மை, வேளாண்மை சார்ந்த தொழில்துறை, கிராமப்புற மேம்பாடு மற்றும் ஆரோக்கியச் சேவை குழுத்தலைவரும் செபெராங் ஜெயா சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் அஃபீஃப் பஹார்டினும் கலந்து கொண்டார்.