மலேசிய 2016-ஆம் ஆண்டுக்கான வரவுச்செலவு திட்டத்தில் மீண்டும் பினாங்கு மாநில மேம்பாட்டுத் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்படாதது தமக்கு ஏமாற்றத்தை அளிப்பதாகக் குறிப்பிட்டார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். பிரதமரின் வரவுச்செலவு திட்டத்தில் பினாங்கு மாநிலத்திற்கு ஒரு மேம்பாட்டுத் திட்டம் கூட வரையறுக்கப்படாதது அனைவருக்கும் வருத்தத்தை அளிப்பதாகக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தினர். பினாங்கு மாநிலமும் மலேசிய நாட்டில் ஒரு பகுதி என்றும் கடந்த 2014-ஆம் ஆண்டு ரிம6.25பில்லியன் வருமானத்தை ஈட்டிகொடுத்ததையும் கூட்டரசு அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும்.
பினாங்கு மாநில போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டம், விமான நிலைய விரிவாக்கம் மற்றும் விரைவு இரயில் சேவை ஆகிய அனைத்து திட்டங்களும் வரவுச்செலவு திட்டத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளன. பினாங்கு மாநிலத்தில் விரைவு இரயில் சேவை அமைக்கப்படும் என பிரமர் மூன்று முறை வாக்குறுதி வழங்குய போதிலும் இன்று வரை செயல்படுத்தவில்லை. மேலும் கூட்டரசு அரசின் செயல்பாடு அரலமைப்பில் இடம்பெறும் கூட்டாட்சியை வெளிப்படுத்தவில்லை என மேலும் கூறினார். அதோடு, கூட்டரசு அரசு பொருள் சேவை வரியை கூடிய விரைவில் மீட்டுக் கொள்ள வேண்டும் எனச் சாடினார். 30 மில்லியன் மலேசியர்களிமிருந்து ஏறக்குறைய ரிம21 பில்லியன் பொருள் சேவை வரி வசூலிக்கப்படும் எனக் குறிப்பிட்டார். இந்தக் கூடுதல் வரிச் சுமை பொது மக்களுக்கு இன்னல் விளைவிக்கிறது என்றார்.
முதலாம் துணை முதல்வர் டத்தோ ரஷிட் ஹஸ்னோன், ஆட்சிக்குழு உறுப்பினர்களான திரு ஜெக்டிப் சிங் டியோ மற்றும் அஃபிப் பஹாருடின் செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.