பத்து காவான் – வருகின்ற 2020-ஆம் ஆண்டில் கலைநிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளை விட சமூகநலன் திட்டங்களுக்கே அதிக முன்னுரிமை வழங்கப்படும். குடும்ப சமூகநலன், சுகாதாரம், சுற்றுச்சூழல், பொருளாதார மேம்பாடு சார்ந்த திட்டங்கள் வழிநடத்த உத்வேகம் கொண்டுள்ளதாக,” தாமான் பெர்வீரா, பொது மைதான உடற்பயிற்சி உபகரணங்கள் பொருத்தும் நிகழ்வினை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்து பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி ராணி பட்டு இவ்வாறு கூறினார்.
பொது மக்கள் அனைவரும் சுகாதாரமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும். பொதுவாகவே, உடல் மெலிந்து இருப்பதற்கு முக்கியத்துவம் வழங்கும் பொது மக்கள் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
உடல் சுகாதாரத்தைப் பேணுவதற்கு தினமும் உடல் பயிற்சி செய்ய வேண்டும். மேலும், சரியான உணவு முறை குறிப்பாக சீனி மற்றும் புரதம் கொண்ட உணவு வகைகளை அதிகமாக உட்கொள்ளக் கூடாது என மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பெர்பாத்தாங் திங்கி தன்னார்வலர் தீயணைப்புப் படை, பெர்வீரா இந்தியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
தாமான் பெர்வீரா, கம்போங் நிர்வாக செயல்முறை கழகத் தலைவர் ஒங் உய் ஒய் கூறுகையில், அனைத்து தரப்பினரும் பொது வசதிகளைச் சேதப்படுத்தாமல் பராமரிக்க வேண்டும். மேலும், அக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த பொது வசதியினை முறையாகப் பயன்படுத்தி நன்மைப் பெற வேண்டும் என கூறினார்.
தாமான் பெர்வீராவில் உடற்பயிற்சி உபகரணங்கள் பொருத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி ரிம19,140.00 நிதி ஒதுக்கீடு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.