2020-ஆண்டுக்கான சுதந்திர மாதக் கொண்டாட்டம் மற்றும் தேசியக் கொடியை பறக்கவிடுவோம் பிரச்சாரம் தொடக்க விழாக் கண்டது

Admin

புக்கிட் தம்புன் –பினாங்கு மாநில அளவிலான 2020-ஆண்டுக்கான சுதந்திர மாதக் கொண்டாட்டம் மற்றும் தேசிய கொடியை பறக்கவிடுவோம் எனும் பிரச்சாரம் வண்ணமயமான முறையில் தொடக்க விழாக் கண்டது.


இந்நிகழ்ச்சியை மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அதிகாரப்பூர்வமாக சுல்தான் அப்துல் ஹலீம் முஹாஸாம் ஷா (இரண்டாவது பாலம்) டோல் சாவடி அருகாமையில் தொடக்கி வைத்தார்.

இந்த வருட தொடக்க விழா நிகழ்ச்சி நேரடி மற்றும் டிஜித்தல் கூறுகளின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்டது.

தற்போது கோவிட்-19 தொற்றுநோய் எதிர்த்து போராடும் வேளையில் புதிய இயல்பு மற்றும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள்(எஸ்.ஓ.பி) அமலில் இருந்தாலும் பொது மக்களிடையே தேசப்பற்று மேலோங்கி தான் இருக்கிறது என முதல்வர் தெரிவித்தார்.

“இந்த ஆண்டு சுதந்திரத் தினம் மற்றும் தேசியக் கொடியைப் பறக்க விடுவோம் எனும் பிரச்சாரம் கொண்டாடுவதற்கு வாய்ப்புக் கிடைக்கப்பெற்றதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.

“இந்த ஆண்டு சதந்திர தினக் கொண்டாட்டத்தின் கருப்பொருள் ‘பரிவுமிக்க மலேசியா’ என்பதாகும். இந்த கருப்பொருள் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கோவிட்-19 பரவாமல் தடுக்கும் போராட்டத்தை மையமாக கொண்டது.

“அனைவரின் பரிவுமிக்க செயலானது ஒருவருக்கொருவர் கவனித்து கொள்ளுதல் மற்றும் சுதந்திரக் கொண்டாட்டத்தின் புரிதலை உணர்த்த வித்திடும்,” என முதல்வர் தமது உரையில் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ லாவ் சூ கியாங், இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, மாநில செயலாளர் டத்தோ அப்துல் இரசாக் ஜாஃபார், சட்டமன்ற உறுப்பினர்கள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

சாவ் கொன் யாவ் கூறுகையில், இந்த சுதந்திர மாதம் மற்றும் தேசியக் கொடியை பறக்கவிடுவோம் எனும் கொண்டாட்டம் மலேசியா நாட்டின் மீது கொண்ட மரியாதை, சுபிட்சம் மற்றும் அமைதிக்கான தேசப்பற்றை பதிவுச் செய்யும் அரசாங்கத்தின் முயற்சியாகத் திகழ்கிறது.

“பல்லின மக்களுடன் ஒன்றிணைந்து வாழ்வதன் மூலம் ஒருவருக்கொருவர் மரியாதை மற்றும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் ஒற்றுமை பேணி வாழ துணைபுரிகிறது.

“மலேசியாவில் அனுசரிக்கப்படும் பல்லின மக்களின் கலை, கலாச்சாரம், பாரம்பரியம் தனித்துவம்மிக்கதாகவும், பல ஆண்டுகளாக இந்நாட்டின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையை பறைச்சாற்றும் தூணாகவும் இடம்பெறுகிறது,” என்றார்.

இந்த ஆண்டுக்கான சுதந்திரக் கொண்டாட்டம் மற்றும் தேசியக் கொடியை பறக்கவிடுவோம் எனும் பிரச்சாரம் மாநில அரசு, மலேசிய தகவல் துறையுடன் இணைந்து ஏற்பாடு செய்கிறது.

‘பரிவுமிக்க மலேசியா’ என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படும் இந்த பிரச்சாரம் ஜுலை,16 முதல் ஆகஸ்ட், 30 வரை ‘மெர்டேகா @ கொமுனித்தி’, தேசப்பற்று பேச்சு போட்டி, கவிதை போட்டி, தேசப்பற்று கதை சொல்லும் போட்டி மற்றும் பல போட்டிகள் இடம்பெறுகின்றன.

அனைத்து தரப்பினரும் தேசியக் கொடியை வாகனங்கள் அல்லது வளாகங்களில் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதன் மூலம் தேசப்பற்றை வெளிப்படுத்துவதோடு கோவிட்-19 எதிர்த்து போராடும் போராட்டத்தை சித்தரிக்கிறது.

பினாங்கு தகவல் துறை இயக்குநர் சப்ரி சையத் கூறுகையில்,
இதுவரை சுமார் 5,000 தேசியக் கொடிகளை சமூக பிரதிநிதிகள், அரசு சாரா நிறுவனங்கள் (தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்) மற்றும் துறை பிரதிநிதிகளுக்கு விநியோகிக்கப்பட்டன என செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

“கடந்த ஜூலை,16 முதல் ஆகஸ்ட்,30 வரை பினாங்கு மாநில அளவில் ‘இன்ஃபோ ஆன் வீல்ஸ்’ (Info On Wheels) எனும் திட்டத்தின் கீழ் 100 நிகழ்ச்சிகள் நடத்தப்படும. ஒரு மாவட்டத்தில் 20 நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக,” மேலும் கூறினார்.

முதல்வர் 40 மாநில அரசு மற்றும் கூட்டரசு நிறுவனங்களுக்கு தேசியக் கொடியை வழங்கி ‘இன்ஃபோ ஆன் வீல்ஸ்’ எனும் அணிவகுப்பை தொடக்கி வைத்தார்.