2021 மதிப்பீட்டு வரி செலுத்துவோருக்கு அதிர்ஷ்ட்ட குலுக்கில் 10,000 வரையிலான ரொக்கப்பணம் வழங்கப்படும்.

Admin

 

செபராங் ஜெயா – செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) 2021 மதிப்பீட்டு வரியை விரைவில் செலுத்த ஊக்குவிக்கும் வகையில்  அதிர்ஷ்ட குலுக்களில் வெற்றிப் பெறுவோருக்கு ரிம10,000 வரையிலான ரொக்கப்பணம் வழங்குகிறது.

எம்.பி.எஸ்.பி மேயர், டத்தோ ரோசாலி முகமட் கூறுகையில், இந்த சிறப்பு சலுகை குறிப்பாக கியோஸ் அல்லது இணையதள (ஆன்லைன்) வாயிலாக 2020 டிசம்பர்,1 முதல் 2021 பிப்ரவரி,28 வரையிலான காலவரையறையில் செலுத்துபவர்களுக்குப் பிரத்தியேகமாக வழங்கப்படுகிறது, என்றார்.

“எம்.பி.எஸ்.பி கவுண்டரில் நேரடியாக பணம் செலுத்துபவர்களுக்கு இம்முறை பரிசுகள் எதுவும் வழங்கப்படாது.

பொதுமக்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மதிப்பீட்டு வரி செலுத்தும் பரிவர்த்தனைகளை இணையதள வாயிலாக செலுத்த
ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

“கோவிட்-19 தொற்றுநோயால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட நிலையில் புதிய இயல்பில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒரு முன்முயற்சியாகத் திகழ்கிறது,” என்று எம்.பி.எஸ்.பி  கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

எம்.பி.எஸ்.பி மாநகர் கழகச் செயலாளர் ரோஸ்னானி மாமுட் மற்றும் அக்கழக உறுப்பினர்களும் இச்செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

மேலும் கருத்து தெரிவித்த ரோசாலி, 2021-ஆம் ஆண்டிற்கான வருடாந்திர மதிப்பீட்டு வரியை நிலுவைத் தொகையுடன் சேர்த்து செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்துபவர் மட்டுமே இந்த அதிர்ஷ்டம
குலுக்களுக்கு தகுதிப்பெறுவர்.

“அதிர்ஷ்ட குலுக்கள் வெற்றியாளர்களை இணைய வாயிலாக தேர்வுச் செய்யப்படுவர். மேலும், 2021 மார்ச் மாதம் நடைபெறும்  கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவார்கள், ”என்று அவர் மேலும் கூறினார்.

விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் வழங்கப்படும் பரிசுகளின் பட்டியல் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, https://www.mbsp.gov.my என்ற வலைத்தளத்தை வலம் வரலாம் அல்லது 04-549 7470-ஐ அழைக்கவும்.