ஜார்ச்டவுன் – மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் 14-வது சட்டமன்றக் கூட்டத்தொடரில் ‘பினாங்கு: நிலையான மற்றும் மீட்சி பொருளாதாரத்தில் புதிய பரிமாணத்தை நோக்கி உருமாற்றம் காணுதல்’ என்ற கருப்பொருள் கொண்ட வரவு செலவு திட்டத்தை வாசித்தார்.
இந்த வரவு செலவு திட்டம் நான்கு பிரதான திட்டங்களை உள்ளடக்கியுள்ளன. அவை முதலீட்டை ஊக்குவித்தல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க உற்பத்தித்திறனை அதிகரித்தல் ; டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் தகவல்தொடர்புகளை மேம்படுத்துதல்; மக்களின் வாழ்க்கைத் தரத்தை வலுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல், அத்துடன் மனித மூலதனத்தின் பங்கு மற்றும் திறன் மேம்படுத்துதல் ஆகும்.
2021 ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில்
ரிம99.64 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்து மனித மூலதன பங்களிப்பு மற்றும் திறன் மேம்பாடு வலுப்படுத்தப்படும் என அறிவித்தார்.
“இந்த ஆண்டு நிர்வாக செலவினங்களுக்கு ரிம909.82 மில்லியன் ஒதுக்கப்பட்ட வேளையில்
மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரிம294,106,207 நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது.
2021-ஆம் ஆண்டு வரவு செலவில் ரிம506.02
மில்லியன் வருமானமாகவும் அதேவேளையில் ரிம403.80 மில்லியன் பற்றாக்குறை ஏற்படுகிறது.
இந்த பற்றாக்குறை எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் அதாவது ரிம273.5 மில்லியன் கூடுதலாகும் என முதல்வர் தெரிவித்தார்.
இந்த ரிம403.80 மில்லியனுக்கான பற்றாக்குறை 2018 ஆம் ஆண்டின் இறுதியில் மாநில திரட்டப்பட்ட சேமிப்பு நிதியத்திலிருந்து ரிம1.07 பில்லியன்
நிதியளிக்கப்படும்.
இந்நிதி ஒதுக்கீட்டிலிருந்து ரிம9 மில்லியன் கம்போங் நிர்வாக செயல்முறை கழக உறுப்பினர்களுக்கு (எம்.பி.கே.கே) ஊக்கத்தொகை வழங்க பயன்படுத்தப்படும்.
“கடந்த ஆண்டு ரிம4.1மில்லியன் ஊக்கத்தொகை வழங்கிய வேளையில் இந்த ஆண்டு கூடுதலாக ரிம4.9மில்லியன் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
“இது மாநிலத்தின் மேம்பாட்டுக்காக ஆணி வேராகத் திகழும் எம்.பி.கே.கே உறுப்பினர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் அமைகிறது.
மாநில அரசு பெண்கள் மற்றும் குடும்ப மேம்பாட்டுக் குழுவின் (ஜே.பி.டபிள்யூ.கே) மூலம் இம்மாநிலத்தில் பெண்களின் தலைமைத்துவ பங்களிப்பை மேம்படுத்த ரிம1.35மில்லியன் நிதி ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது என முதல்வர் கூறினார்.
அதேசமயம், 2021 ஆம் ஆண்டில் தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியத்தின் (எல்.பி.கே.கே.என்) ஒத்துழைப்பு மூலம் பினாங்கு பெண்களுக்கான இலவச முலை ஊடுகதிர்ப்பட சோதனை திட்டத்தை (மம்மோ-பினாங்கு) செயல்படுத்தவும் மாநில அரசு ரிம886,000 தெரிவித்துள்ளது.
“மேலும், பினாங்கு மாநிலத்தை டிஜிட்டல் புத்தாக்கத் துறையில் மேம்படுத்தும் பொருட்டு பினாங்கு இளைஞர் மேம்பாட்டுக் கழகத்திற்கு ரிம1மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்தது,” என்றார்.
பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகத்திற்கு (பி.டபிள்யூ.டி.சி) ரிம1.5 மில்லியன் நிதி ஒதுக்குவதன் மூலம் பெண்கள் மேம்பாட்டு நிகழ்ச்சி நடத்துதல்; குடும்பம் மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றை வலுப்படுத்த மாநில அரசு உறுதிபூண்டுள்ளது என்று கொன் யாவ் கூறினார்.
“அடுத்த ஆண்டு இஸ்லாம் அல்லாத பிற மத விவகாரங்கள் தொடர்பான பிரச்சினைகள் தீர்வுக்கான ரிம300,000 நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது, என பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினருமான கொன் யாவ் தெரிவித்தார்.
அனைத்துலக ரீதியில் மாணவர்கள் சிறந்து விளங்குவதற்கு மாநில அரசு ‘மெக்கர்ஸ் லேப்’அமைக்க ரிம3.24 மில்லியன் நிதி ஒதுக்கீடு கொடுக்கிறது.
“மாணவர்களிடையே அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் எனும் ‘STEM’ கல்வி மீது அதிகம் நாட்டம் உருவாக்கும் வகையில் மேக்கர்ஸ் லேப் அமைக்கப்படுகிறது.
மனித மூலதனத்தை கல்வியின் வாயிலாக வலுப்படுத்த, மாநில அரசு மொத்தம் ரிம14 மில்லியனை ‘மக்கள் மத பள்ளிகள்'(SAR), முபாலிக் பள்ளிகள், சீன பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கியுள்ளது.
“அதுமட்டுமின்றி, தீபகற்ப மலேசியாவில் உள்ள உயர்க்கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு ரிம1,000; சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் பயிலும் மாணவர்களுக்கு ரிம1,200 மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ரிம300 என ஊக்கத்தொகை வழங்க ரிம4 மில்லியன் ஒதுக்கீட்டின் மூலம் தொடர்ந்து வழங்கப்படும்,” என்று அவர் கருத்து தெரிவித்தார்.
“பினாங்கு மாநில அரசு ஊழியர்களான 4,009 பேர்களுக்கு அரை மாத போனஸ் அல்லது குறைந்தபட்சம் ரிம1,000 சிறப்பு நிதி உதவி கிடைக்கும். இந்த ஆண்டு (2020) டிசம்பர் மாதம் இந்த உதவி வழங்கப்படும் என கூறினார்.
“கூடுதலாக, பினாங்கு அரசாங்கம் மேற்பார்வையாளர்கள் மற்றும் காஃபா ஆசிரியர்கள், மத பள்ளி ஆசிரியர்கள், தனியார் சீனப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், தஃபிஸ் ஆசிரியர்கள் மற்றும் தாடிஸ் ஆசிரியர்கள் ஆகியோருக்கு நிதி உதவியாக ரிம898,900 ஒதுக்கியது. இந்த ஆண்டு டிசம்பரில் இவ்வுதவி தரப்படும்,” என சாவ் கொன் யாவ் மேலும் விவரித்தார்.
“மேலும், பினாங்கு அதிகப்பட்சமாக 80% வீட்டுவசதி பராமரிப்பு நிதி (TPM80PP) மூலம் தனியார் வீட்டுத் திட்டங்களைப் பராமரிக்க பினாங்கு அரசாங்கம் அடுத்த ஆண்டு ரிம6.8 மில்லியனை ஒதுக்கியுள்ளது.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு இலவச பேருந்து சேவை (கேட்) அடுத்த ஆண்டும் தொடரப்படும். ஆகவே, இலவச பேருந்து சேவை தரத்தை மேம்படுத்த அரசு ரிம15 மில்லியனை ஒதுக்கியுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.
பினாங்கு மாநிலத்தின் 2021 ஆண்டின் வரவு செலவில் பின்வருவன அடங்கும்:
*விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு பூங்கா மேம்பாடு = ரிம15.45 மில்லியன்
*சமூகநலத்திட்டமான ‘iSejahtera’=ரிம50 மில்லியன்
*அதிக பாதிப்பு ஏற்படுத்தும் வெள்ளத் நிவாரணத் திட்டம் = ரிம96.13 மில்லியன்
*சாலை, பாலம் கட்டுமானம் மற்றும் மேம்படுத்தும் திட்டங்கள் = ரிம31.98 மில்லியன்
*மலிவு விலை பொது வீட்டுவசதி பராமரிப்பு, பழுது மற்றும் மேம்படுத்தல் = ரிம12 மில்லியன்
* நீர் விநியோகத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்தல் = ரிம10.5 மில்லியன்
*விவசாயத் துறை மேம்பாடு = ரிம5.65 மில்லியன்
*கால்நடைத் துறை மேம்பாடு = ரிம3.52 மில்லியன்
*ஜார்ச்டவுன் உலக பாரம்பரிய நிறுவனம் (GTWHI) = ரிம2 மில்லியன்
*பினாங்கு கொடி மலை மேம்படுத்தல் = ரிம14.11 மில்லியன்
*சுங்கை புயுவிலிருந்து ஜாலான் சிராம் வடிகால் திட்டம் =ரிம5 மில்லியன்
*மாக் மண்டின் அங்காடி வியாபாரிகள் வளாகத்தை மேம்படுத்தல் = ரிம1.4 மில்லியன்
*ரோபினா சுற்றுச்சூழல் பூங்கா மேம்படுத்தல் (கட்டம் 2) = ரிம2 மில்லியன்
*முத்தியாரா உணவு வங்கி திட்டம் = ரிம300,000