ஜார்ச்டவுன் – தேசிய தணிக்கை கணக்காய்வாளர் 2022 ஆம் ஆண்டிற்கான மாநில அரசின் நிதிநிலை அறிக்கையின் அடிப்படையில் பினாங்கு மாநிலத்தின் நிதி நிலை நிலையானது என அறிவிக்கப்பட்டது.
2022 நிதியாண்டிற்கான ‘Sijil Bersih’
எனும் சான்றிதழை மீண்டும் ஒருமுறை பெற்றதன் மூலம், பினாங்கு மாநில அரசாங்கம், ஆற்றல், பொறுப்பு மற்றும் வெளிப்படை (CAT) எனும் கொள்கையின் அடிப்படையில் மாநிலத்தின் நிதியை நிர்வகிப்பதில் தனது திறமையை நிரூபித்துள்ளது என்று மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.
“மாநிலத்தில் வருவாய் ரிம485.42 மில்லியன், அதேவேளையில் ரிம935.53 மில்லியன் நிர்வாகச் செலவுகள் என்றும் ரிம450.11 பற்றாக்குறையுடன் 2022 வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்யப்பட்டது.
“2022 ஆம் ஆண்டின் இறுதியில், ரிம689.72 மில்லியனாக இருக்கும் மாநிலத்தின் திரட்டப்பட்ட சேமிப்பிலிருந்து மதிப்பிடப்பட்ட பற்றாக்குறை நிதியளிக்கப்பட்டது. மேலும் செலவுகளுடன் ஒப்பிடும்போது வருவாய் பற்றாக்குறையின் அடிப்படையில் பார்த்தால், மாநில அரசு 40 சதவீதத்திற்கும் அதிகமாக பதிவு செய்துள்ளது,” என்று 2023 வரவு செலவுத் திட்டத்தை தயார் செய்யும் வகையில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டத்தொடரில் மாநில முதலமைச்சர் இவ்வாறு கூறினார்.
மேலும், மாநில சட்டமன்றத்தின் சபாநாயகரும், மாநில அரசின் அதிகாரப்பூர்வ கவுன்சில் தலைவருமான டத்தோ லாவ் சூ கியாங்; முதலாம் துணை முதலமைச்சர் டத்தோ முகமட் அப்துல் ஹமீட்; இரண்டாம் துணை முதலமைச்சர், ஜக்தீப் சிங் டியோ; மாநில அரசு செயலாளர், டத்தோ ரோஸ்லி இசா; ஆட்சிக்குழு உறுப்பினர்கள்; மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்; மாநில நிதி அதிகாரி, ஜபிதா சஃபர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு செப்டம்பர்,30 வரை, மாநில அரசு ரிம221.72 மில்லியன் வரி அல்லாத வருவாய், வரி வருவாய் (ரிம143.42 மில்லியன்) மற்றும் வருவாய் அல்லாத வரவுகள்(ரிம90.59 மில்லியன்) ஆகியவற்றை உள்ளடக்கிய ரிம455.75 மில்லியன் வருவாயைச் சேகரிக்க முடிந்தது என்று கொன் இயோவ் கூறினார்.
“நான், பற்றாக்குறை அதிகமாக இருப்பதை மறக்கவில்லை. இருப்பினும், பொருளாதார மீட்பு மற்றும் அதிகாரமளிக்கும் நடவடிக்கைகளால் வருவாய் சேகரிப்பு மீண்டும் அதிகரிக்கப்படும் என்று மாநில அரசு நம்பிக்கை கொள்கிறது.
“அனைத்து தரப்பினரின் தொடர்ச்சியானப் பங்களிப்பு மற்றும் விவேகமான நிதி மேலாண்மை மூலம் மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று மாநில அரசு நம்புகிறது” என்று முதலமைச்சர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், 2024 வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கான கூட்டுத்தொடர் அமர்வில் கருத்து தெரிவித்த கொன் இயோவ், அக்டோபர் 9 ஆம் தேதி வரை 14 மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து
ரிம908.72 மில்லியன் மதிப்பீலான மொத்தம் 81 முன்மொழியப்பட்ட திட்டங்களை மாநில நிதித் துறை பெறப்பட்டுள்ளன.
“முன்மொழியப்பட்ட திட்டங்கள் மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவு (BPEN) மற்றும் மாநில நிதித் துறையால் மதிப்பீடு செய்யப்பட்டு இத்திட்டங்கள் செயல்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும்,” என்று அவர் விளக்கமளித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த கொன் இயோவ், பினாங்கு2030 இலக்கின் குறிக்கோளுக்கு இணங்க மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நிலையான திட்டமிடலை உறுதி செய்ய இந்தக் கூட்டத்தொடர் துணைபுரியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
“இதன் மூலம், மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தி மக்களுக்கு பயனளிக்கிறது. மேலும், நிதி நிர்வாகம், விவேகமான செயல்பாட்டு செலவு மற்றும் முதலீட்டைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது.
“அதிக பணவீக்கம் உட்பட பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும், அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் குறிக்கோள் ஒரே மாதிரியாக இருக்கின்றன. இது மாநிலத்தில் விசுவாசம், ஒருமைப்பாடு, நிபுணத்துவம் மேம்பாடு மற்றும் ஒற்றுமையை உருவாக்குகிறது” என்று அவர் கூறினார்.