ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசாங்கம் 2022 ஆம் ஆண்டுக்கான மாநில உபகாரச் சம்பளம்(பி.கே.என்) திட்டத்தின் கீழ் 121 இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த 1,554 புதிய மாணவர்களுக்கு ரிம1,040 670 உதவித்தொகை பெற தேர்வுச் செய்யப்பட்டனர்.
மாநில அரசு 2008 ஆம் ஆண்டு முதல் ரிம29.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இம்மாநில 121 இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 14,754 மாணவர்கள் உபகாரச் சம்பளம் பெற்று பயனடைந்துள்ளனர்.
பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறுகையில், 2021ஆம் ஆண்டு முதல், இந்த உபகாரச் சம்பளம் வழங்கும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரிம2.0 மில்லியன் இருந்து ரிம3.0 மில்லியனாக உயர்வுக் கண்டுள்ளது.
“இந்த உபகாரச் சம்பளம் வழங்குவதன் மூலம் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்குவதை ஊக்குவிப்பதோடு சிறந்த தேர்ச்சிப் பெறவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
“மேலும், பி40 குழுவைச் சேர்ந்த பெற்றோர்கள் எதிர்கொள்ளும் நிதிச் சுமையைக் குறைக்க முடியும்,” என்று முதல்வர் கூறினார்.
மேல் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ரிம840 மற்றும் ஆரம்ப இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ரிம600-ஐ உபகாரச் சம்பளமாகப் பெறுவர் என அறியப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான ரிம1,040, 670 உபகாரச் சம்பளம் மின்னனு நிதி பரிமாற்றம் (EFT) மூலம் வழங்கப்படுகிறது. முன்னதாக காலோலை வாயிலாக இந்நிதி வழங்கப்பட்டது, என்று தி லைட் தங்கும் விடுதியில் மாநில உபகாரச் சம்பளம் தொடர்பான கடிதம் வழங்கும் நிகழ்ச்சியில் மாநில முதல்வர் சாவ் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில், மாநில துணை செயலாளர் (மேலாண்மை) டத்தோ அகமட் ரிசல் பின் முகமட் ஹனாபியா, மாநில கல்வி இலாகா பிரதிநிதிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வருகையளித்தனர்.
உபகாரச் சம்பளப் பெறுநர்களின் விபரம் பின்வருமாறு:
•வடகிழக்கு மாவட்டம் – 34 பள்ளிகளைச் சேர்ந்த 362 மாணவர்கள் பெறுவர். (ரிம255,150 நிதி ஒதுக்கீடு)
•தென்மேற்கு மாவட்டம் – 12 பள்ளிகளைச் சேர்ந்த 231 மாணவர்கள் பெறுவர். (ரிம154,680 நிதி ஒதுக்கீடு)
• வட செபராங் பிறை மாவட்டம் – 28 பள்ளிகளைச் சேர்ந்த 369 மாணவர்கள் பெறுவர். (ரிம240,00 நிதி ஒதுக்கீடு)
•மத்திய செபராங் பிறை மாவட்டம் – 30 பள்ளிகளைச் சேர்ந்த 366 மாணவர்கள் பெறுவர். (ரிம247,320 நிதி ஒதுக்கீடு)
•தென் செபராங் பிறை மாவட்டம் – 17 பள்ளிகளைச் சேர்ந்த 226 மாணவர்கள் பெறுவர் (ரிம143,520 நிதி ஒதுக்கீடு)