2024, அக்டோபர் வரை i-Sejahtera திட்டத்திற்காக ரிம50 மில்லியன் நிதியுதவி – சாவ்

Admin
b1e8c285 f296 4a5a ba90 aab6523e4a60


ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசாங்கம் பொது மக்களின்  சமூகநலனுக்கு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது.  மேலும், தகுதியான பெறுநர்களுக்கான i-Sejahtera திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை ரிம54.8 மில்லியன் நிதியுதவி வழங்கி அதனை நிரூபிக்கிறது.

 

இதன் மூலம் மொத்தம் 284,095 பெறுநர்கள் பயனடைந்துள்ளதாக மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.

 

இதற்கிடையில், 2017 முதல் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உணவு வழங்குபவராக, பினாங்கின் முத்தியாரா உணவு வங்கி முன்முயற்சி திட்டம் வாயிலாக 1,880 டன் உணவைச் சேகரித்து, 120,614 பெறுநர்கள் அதனால் பயனடைகின்றனர்.

 

“இது வசதிக் குறைந்தவர்களின் சமூகநலன் தேவைகளுக்கு இடமளிக்கும் ஒரு முக்கிய முன்முயற்சி திட்டமாகும். மேலும் இத்திட்டத்தை வெற்றியடையச் செய்ய  பங்குதாரர்களிடம் இருந்து நாங்கள் தொடர்ந்து பெற்ற உதவிக்கு  நன்றித் தெரிவிக்க விரும்புகிறோம்,” என்று பினாங்கு 2025 ஆண்டு வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்த பின்னர் சாவ் இதனைக் கூறினார். 

 

பின்னர், தேசிய சமூகக் கொள்கை 2030-ஐ அறிமுகப்படுத்தியதற்காக மத்திய அரசுக்கு சாவ் நன்றித் தெரிவித்தார். மேலும் இந்த முன்முயற்சிக்கு இணங்க, மாநில அரசு மொத்தம் ரிம612,500 நிதியை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் சியூ கிம் தலைமையில் சமூக மேம்பாட்டுத் துறைக்கு ஒதுக்கியுள்ளது. 

 

இது தொடர்பான வளர்ச்சியில், இஸ்லாம் அல்லாத மத விவகாரங்களை ஆதரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் இந்த ஆண்டு ரிம150,000 ஒதுக்கி மாநில அரசு மற்றுமொரு ஆக்கப்பூர்வமான  நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.