ஜார்ச்டவுன் – 2024 ஆம் ஆண்டு முழுவதும் பினாங்கு அடைந்த பல்வேறு வெற்றிகள் மற்றும் அடைவுநிலைகள், இம்மாநிலம் மிகவும் சிறப்பான முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கிறது என்பதை நிரூபிக்கிறது.
இந்த சாதனை பினாங்கு மாநிலத்தின் ஊக்கமளிக்கும் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக வளர்ச்சியை பிரதிபலித்துள்ளது என்று மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறினார்.
பினாங்கு ரிம31.38 பில்லியன் முதலீட்டை ஈர்த்துள்ளது. இதன் வழி, குறிப்பாக உயர் மதிப்பு உற்பத்தித் துறை, மேம்பட்ட சேவைகள் மற்றும் நவீன விவசாயம் துறைகளில் 6,600-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
மேலும், தென்கிழக்கு ஆசியாவில் முன்னணி மருத்துவ சுற்றுலா மையமாக உருவெடுத்துள்ளதோடு, மலேசியாவில் 99.15 சதவீதத்தில் மூன்றாவது அதிகமான சேம நிதி வாரியம்(EPF) பங்களிப்பு விகிதத்தை பினாங்கு பதிவு செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.
கடந்த டிசம்பர் 2024 இல், பினாங்கு மேம்பாட்டுக் கழகம் (PDC) SkyWorld மேம்பாட்டு பெர்ஹாட் உடன் இணைந்து 37,300 வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளை உருவாக்குவதற்கான கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் ‘மடானி புதிய திறன் திட்ட’ (Bakat Baru Madani) முன்முயற்சியின் கீழ் செயல்பாடுக் காண்கிறது. இத்திட்டம் நாட்டின் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்பு மேம்பாட்டு வரலாற்றில் மிகப்பெரிய சாதனையைப் பதிவு செய்கிறது.
“அதுமட்டுமின்றி, பினாங்கு பொருளாதார மற்றும் தொழில்நுட்ப சிறப்பின் மையமாக திகழ்வதன் வாயிலாக அதன் உயர் தொழில்நுட்ப முதலீட்டு மையமாகவும், உலகளாவிய முதலீட்டாளர்களின் விருப்பமான இடமாகவும் அதன் நிலையை வலுப்படுத்துவது அவசியம், என்றார்.
“கூடுதலாக, பினாங்கு ஒரு பசுமையான, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான மாநிலமாக உருவெடுத்து, அறிவார்ந்த மற்றும் நிலையான குடும்பம் மற்றும் சமூகத்தை உருவாக்க வேண்டும் என ஸ்ரீ பினாங்கு அரங்கில் நடைபெற்ற பொதுச் சேவை ஊழியர்கள் உடனான சந்திப்புக் கூட்டத்தில் மாநில முதலமைச்சர் இவ்வாறு கூறினார்
இந்தச் சந்திப்புக் கூட்டத்தில், பினாங்கு மாநில சட்டமன்றத்தின் சபாநாயகர் டத்தோ ஶ்ரீ லாவ் சூ கியாங்; முதலாம் துணை முதலமைச்சர் டத்தோ டாக்டர். முகமது அப்துல் ஹமீத்; இரண்டாம் துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் டியோ, மாநில அரசு செயலாளர், டத்தோ சுல்கிஃப்லி லாங்; ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசுத் துறைத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிதி, பொருளாதார மேம்பாடு & நிலம் மற்றும் தகவல் தொடர்புகளுக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ், இந்த வெற்றிகள் அனைத்தும் அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக இருக்கும் அரசு ஊழியர்களின் உயர் அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த சேவையின் பிரதிபலிப்பு என்று கூறினார்.
எனவே, பொதுச் சேவை ஊழியர்கள் மக்களுக்கான சிறந்த சேவையைத் தொடர்ந்து வழங்க இணக்கம் கொள்ள வேண்டும்.
“அரசு ஊழியர்களின் அணுகுமுறை, அர்ப்பணிப்பு, புத்தாக்கம் மற்றும் அவர்களின் கடமைகளை நிறைவேற்றுவதில் அவர்களின் உற்பத்தித்திறன் ஆகியவை பொதுச் சேவைகளை திறம்பட வழங்க ஊக்குவிக்கிறது. இது அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்ல, நிர்வாக உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் தொழில்முறை மற்றும் முற்போக்கான சேவை வழங்களின் பண்புகளைப் பின்பற்ற வேண்டும்.
மேலும், கடந்த, 2 டிசம்பர் 2024 மாநிலத்திற்கான 12வது மலேசியா திட்டத்தில் (RMK12) மொத்தம் 306 திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதில், 246 திட்டங்கள் 4வது ரோலிங் திட்டத்தின் (Rolling Plan) கீழ் புதியவை, மேலும் 60 திட்டங்கள் நீட்டிப்பு திட்டங்களாகும். பினாங்கிற்கான மொத்த திட்டச் செலவு ரிம28.406 பில்லியன் மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான அங்கீகரிக்கப்பட்ட ஒதுக்கீடு ரிம்1.356 பில்லியன் ஆகும். 2024 ஆம் ஆண்டிற்கான அங்கீகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டில், 81.76 சதவீதத்திற்கு சமமான ரின1.108 பில்லியன் செலவினம் பதிவு செய்யப்பட்டுள்ளது.