ஜார்ச்டவுன் – 1986 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இம்மாநிலத்தின் மதிப்புமிக்க விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாக பரிணமித்துள்ள பினாங்கு பாலம் அனைத்துலக மராத்தான் (PBIM) இந்த ஆண்டு பத்து காவானில் நடைபெறவுள்ளது.
எஸ்பேன் – கிலிபா பினாங்கு பால அனைத்துலக மராத்தான் (Penang Bridge International Marathon 2024) என அழைக்கப்படும் இந்த ஆண்டுக்கான போட்டியானது அஸ்பென் குழுமம் மற்றும் இகானோ மையம் (கிளிப்பா ஷாப்பிங் சென்டர்) உடன் பினாங்கு அரசாங்கம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
இந்த ஆண்டு கலந்து கொள்ளும் ஓட்டப்பந்தய வீரர்கள் புதிய அனுபவத்தை எதிர்பார்க்கலாம். ஆண்டுதோறும் முதல் பினாங்கு பாலத்தில் பயணிக்கும் பாதையை விட புதிய பாதையில் புதிய சூழலை அனுபவிப்பார்கள் என்றும் மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் நம்பிக்கை தெரிவித்தார்.
“ஒவ்வொரு ஆண்டும், இம்மாரத்தான் போட்டி உலகெங்கிலும் உள்ள பங்கேற்பாளர்களை ஈர்க்கிறது. இது பந்தயத்தின் சவாலாக மட்டுமல்ல, பினாங்கின் கலாச்சாரம் மற்றும் பிரமிக்கக்கூடிய இயற்கைக் காட்சிகளில் தங்களை மூழ்கடிக்கும் வாய்ப்பினை வழங்குகிறது.
“இந்த ஆண்டு, 30,000 பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வர் என்ற இலக்கு கொண்டுள்ளோம்.
“இந்த ஒத்துழைப்பில் இணைந்ததற்காக அஸ்பென் மற்றும் கிளிப்பா ஆகியோருக்கு அரசு தனது இதயப்பூர்வமான பாராட்டுகளைத் தெரிவிக்கிறது. மேலும் இந்த கூட்டாண்மையின் வெளிப்பாட்டில் போட்டியின் அந்தஸ்தை உயர்த்துவது மட்டுமல்லாமல், நமது மாநிலத்தின் சமூகப் பொருளாதார நிலப்பரப்பில் ஒரு நீடித்த முத்திரையைப் பதிக்கும்,” என்று சாவ் கூறினார்.
வருகின்ற 15 டிசம்பர் 2024-இல் நடைபெறவிருக்கும் இம்மராத்தான் அஸ்பென் விஷன் சிட்டி விற்பனைக் காட்சியகத்தில் தொடங்கி, சுல்தான் அப்துல் ஹலீம் முஹசம் ஷா பாலத்தை (இரண்டாவது பினாங்கு பாலம்) கடந்து பத்து காவானில் முடிவடையும்.
இப்போட்டியில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்கள் முழு மராத்தான் (ரிம120), அரை மராத்தான் (ரிம110), 10 கி.மீ திறந்த பிரிவு (ரிம 100) மற்றும் 10கி.மீ ஜூனியர் பிரிவு (ரிம 70) என பதிவு கட்டணம் கடந்த ஆண்டு போல் அதே கட்டணம் விதிக்கப்படுகிறது.
முதலில் பதியும் போட்டியாளர்கள் ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பதிந்து கொள்ளலாம். இப்போட்டியைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, https://www.penangmarathon.gov.my/portal/ ஐப் அகப்பக்கத்தை பார்வையிடவும்.
பினாங்கு அரசாங்கம் தீவு மற்றும் பிரதான பெருநிலத்தில் உள்ள ஓட்டப்பந்தய வீரர்கள் மராத்தான் போட்டியில் கலந்து கொள்ள வசதியாக கூடுதல் ஷட்டில் சேவைகளை (பேருந்து சேவை) வழங்கும், என மாநில சுற்றுலா மற்றும் படைப்பாற்றல் பொருளாதார ஆட்சிக்குழு உறுப்பினர் வோங் ஹொன் வாய்.
குயின்ஸ்பே மால், ஐகான் சிட்டி மற்றும் பத்து காவான் ஸ்டேடியம் போன்ற இடங்கள் போக்குவரத்து தேவைப்படுபவர்களுக்கு உதவும் முக்கிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
வளர்ச்சி கண்டு வரும் பத்து காவான் நகரத்தில் பல வாகனங்களை நிறுத்துவதற்கு இடமளிக்கக்கூடிய திறந்தவெளிகள் நிறைய உள்ளன என அதன் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் கூறினார்.
“பத்து காவானில் பல வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன, அத்துடன் நல்ல தங்குமிட இணைப்புகள்
உள்ளன, குறிப்பாக பினாங்கிற்கு வெளியில் இருந்து பயணிப்பவர்களுக்கு தங்குவதற்கு செபராங் பிறை மற்றும் புக்கிட் மெர்தாஜாம் போன்ற பகுதிகளில் பல்வேறு தங்கும் விடுதிகள் உள்ளன.
முன்னதாக, பங்கேற்பாளர்களுக்கு மராத்தான் பற்றிய விரிவான தகவல்கள் வழங்க அதிகாரப்பூர்வ மராத்தான் வழிகாட்டி புத்தகம் வழங்கப்படும் என்றும் வோங் கூறினார்.