2025 இல் பினாங்கு அரசாங்கம் இரண்டு சிறப்புப் பகுதி திட்டங்களைச் செயல்படுத்தும்

Admin
83d2e0d7 3123 4eac 9bb3 c7f677dda447

 

ஜார்ச்டவுன் – இயற்கை வளம் மிக்க சுற்றுச்சூழல் பகுதிகளை அடையாளம் கண்டு நிர்வகிக்க வேண்டியது அவசியமாகும். இது அந்தப் பகுதியில் சமமான மற்றும் நிலையான மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும்.

பினாங்கு மாநில அரசாங்கம் மேலும் இரண்டு சிறப்புப் பகுதித் திட்டங்களைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அவை பாடாங் தெம்பாக் சிறப்புப் பகுதித் திட்டம் மற்றும் பாலிக் புலாவ் சிறப்புப் பகுதித் திட்டம் என்று முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் இன்று நடைபெற்ற மாநில சட்டமன்றக் கூட்டத்தில் தெரிவித்தார்.

பினாங்கு நகர் மற்றும் புறநகர் திட்டமிடல் துறை (PLANMalaysia@Penang)
பினாங்கு மலை சிறப்பு பகுதி திட்டம் மற்றும் ஜார்ச்டவுன் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தள சிறப்பு பகுதி திட்டத்திற்கான வரைவு திருத்தத்தை அரசிதழில் வெளியிடுவதற்கு முன்னதாக அதனை இறுதிச் செய்ய இணக்கம் கொள்வதாக அவர் கூறினார்.

அதுமட்டுமின்றி, PLANmalaysia திட்டத்தின் கீழ் உள்ள பினாங்கு தெற்குத் தீவு 2050 உள்ளூர் திட்டம் (RTPSI 2050) சிறப்பாக முன்னேற்றம் கண்டு வருவதாகவும் சாவ் குறிப்பிட்டார்.

“இந்த உள்ளூர் திட்டம் பினாங்கில் வளர்ந்து வரும் பொருளாதாரத்தை மேம்படுத்த முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், RTPSI 2050 என்பது பினாங்கில் அரசிதழில் வெளியிடப்படும் முதல் உள்ளூர் திட்டமாகும்,” என்று பினாங்கு 2025 வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்யும் போது சாவ் இதனைக் கூறினார்.

இதனிடையே, சாவ் மாநிலம் முழுவதும் 4G இணைப்பு சதவீதத்தைப் பற்றிய ஒரு புதுப்பிப்பை வழங்கினார். இதன் மூலம், குடியிருப்புப் பகுதிகளில் அதன் பயன்பாடு 99.98% எட்டியுள்ளது.

“இது மக்களுக்குத் தரமான உள்கட்டமைப்பு சேவைகளை மேம்படுத்துவதற்கும் வழங்குவதற்கும் மாநில அரசின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

“2024 ஆம் ஆண்டின் இறுதியில் 4G சேவைகளின் 100% இணைப்பை இலக்காகக் கொண்டு பொதுமக்களுக்கான சேவைகளை மேம்படுத்துவதில் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) மற்றும் தேசிய டிஜிட்டல் துறை (DNB) ஆகியவற்றுடன் நாங்கள் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றுகிறோம்,” என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிலவரப்படி, ஐந்தாவது தலைமுறை (5G) ‘வயர்லெஸ் நெட்வொர்க்கின்’ ஒரே வழங்குநரான DNB ஆல் மாநிலத்தில் மொத்தம் 446 இடங்கள் 5G இணைப்புடன் பொருத்தப்பட்டுள்ளன.

 

“இந்த ஆண்டின் இறுதியில் 450 இடங்களில் இணைப்பை நிறைவுச் செய்ய முடியும் என நாங்கள் நம்பிக்கையுடன் செயல்படுகிறோம்,” என்று சாவ் கூறினார்.

 

இது தொடர்பான வளர்ச்சியில், பினாங்கு அரசாங்கம் மாநிலத்தில் சுமூகமான வணிக நடவடிக்கைகளை உறுதி செய்ய
ஒருங்கிணைப்பட்ட முதன்மை மையம் (OSC) 3.0 கீழ் தொழில்துறை பசுமை பாதை (IGL), முன்நிபந்தனை (PR) மற்றும் சுய-ஒழுங்குமுறை (SR) போன்ற பல முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது என்பதையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

 

இதன்வழி, கட்டிடத் திட்ட செயல்முறையை விரைவுப்படுத்தவும், முதலீட்டு இடமாக மாநிலத்தின் போட்டித்தன்மையை மேம்படுத்தவும், இறுதியில் மாநிலத்தின் வருமானத்தை அதிகரிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன,” என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில்,
சாவ்வின் கூற்றுப்படி,
பினாங்கு கட்டமைப்புத் திட்டம் 2030 (RSNPP), பினாங்கு தொடர்ந்து வளர்ச்சிக் காண உறுதிப்படுத்தவும் இம்மாதிரியான முன்முயற்சி திட்டங்களை ஆதரிக்கும் என சூளுரைத்தார்.

 

.