ஜார்ச்டவுன் – மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் பினாங்கின் ஏற்றுமதி 7.5 விழுக்காடு ரிம301.95 பில்லியன் மதிப்பில் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகக் கூறினார்.
2023 ஆம் ஆண்டில் மாநிலத்தின் ஏற்றுமதி முந்தைய ஆண்டை விட 3.6 விழுக்காடு குறைந்து ரிம434.74 பில்லியன் மதிப்பைப் பதிவு செய்த பின்னர் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகிறது, என்றார்.
“மாநில அரசு போட்டித்தன்மையை அதிகரிப்பதிலும், மாநிலத்தின் ஏற்றுமதியின் ஒட்டுமொத்த மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு துணைபுரியும் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தும்,” என்று பினாங்கு மாநில சட்டமன்றத்தில் வரவு செலவு தாக்கல் செய்த போது இதனைத் தெரிவித்தார்.
மாநிலத்தின் மொத்த ஏற்றுமதியில் 78.4 விழுக்காடு இயந்திரங்கள் மற்றும் போக்குவரத்து உபகரணங்களுடன் தொடர்புடையது என்றும், அதைத் தொடர்ந்து தொழிற்சாலை பொருட்கள் மற்றும் இரசாயனங்கள் என்றும் அவர் விளக்கமளித்தார்.
இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டிற்கான மாநில இறக்குமதித் துறையானது, ரிம285.08 பில்லியன் மதிப்புடன் 12.4 விழுக்காடு குறைந்துள்ளதாக கொன் இயோவ் கூறினார்.
இருப்பினும், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலவரையறையில் மாநிலத்தின் இறக்குமதித் துறையானது ரிம214.27 மில்லியன் அல்லது 17.4 விழுக்காடு அதிகரிப்புடன் குறிப்பிடத்தக்க மீட்சியைக் காட்டுகிறது.
2023 ஆம் ஆண்டில் மாநிலத்தின் மொத்த இறக்குமதியில் 72.3 விழுக்காடு இயந்திரங்கள் மற்றும் போக்குவரத்து உபகரணங்கள் பதிவு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து, இரசாயனப் பொருட்கள் மற்றும் தொழிற்சாலைப் பொருட்கள் அடுத்த நிலையில் பங்களிக்கிறது என்று அவர் விளக்கமளித்தார்.
கூடுதலாக, நிதி, நில மேம்பாடு & பொருளாதாரம் மற்றும் தகவல் தொடர்புகளுக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ், பினாங்கின் மொத்த ஏற்றுமதியில் அமெரிக்கா முக்கிய பங்களிப்பாளராக உள்ளது. அதே நேரத்தில் சீன மக்கள் குடியரசு நாடு மாநிலத்தின் இறக்குமதியின் மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது, என்றார்.
பினாங்கின் இறக்குமதித் துறையில் 20.4 விழுக்காடு அமெரிக்கா மூலம் பெறுகிறது. அதைத் தொடர்ந்து, சீனா (18.7 விழுக்காடு), ஹாங்காங் (13.9 விழுக்காடு), தைவான் (6.1விழுக்காடு) மற்றும் வியட்நாம் (5.4 விழுக்காடு) என பதிவுச் செய்கிறது.
இதற்கிடையில், பினாங்கின் மிகப்பெரிய இறக்குமதி ஆதாரமாக சீனா 22.6 விழுக்காடு பதிவு, அதனைத் தொடர்ந்து
தைவான் (17.8 விழுக்காடு), அமெரிக்கா (13.5 விழுக்காடு), ஜப்பான் (8.8 விழுக்காடு) மற்றும் சிங்கப்பூர் (6.3 விழுக்காடு) என பதிவிடுகிறது.