ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசாங்கம் 2025 வரவு செலவு திட்டத்தில் ரிம1.047 பில்லியன் செலவாகும் என்று மதிப்பிடுகிறது, இதில் மாநில நிர்வாகச் செலவுகளுக்கு ரிம940,223,689 நிதி ஒதுக்கீடு வழங்குகிறது.
மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், மாநிலத்தின் நடப்பு நிதி நிலையைக் கணக்கில் கொண்டு, இந்த செலவின மதிப்பீடுகள் முன்மொழியப்படுகிறது, என்றார்.
நிதி, பொருளாதார மேம்பாடு, நிலம் மற்றும் தகவல் தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ் அண்மைய ஐந்தாண்டு நிலையுடன் ஒப்பிடும்போது, அதாவது 2019 முதல் 2023 வரையிலான மாநில அரசின் ஒருங்கிணைந்த வருவாய்க் கணக்கின் இருப்பு குறைந்து கொண்டு வருகிறது.
“பதிவுக்காக, 2019 ஆண்டின் இறுதியில் ஒருங்கிணைந்த வருவாய்க் கணக்கின் இருப்பு ரிம1.154 பில்லியன்; 2020 ஆண்டில், ரிம887.78 மில்லியன்; 2021 ஆண்டில், ரிம848.81 மில்லியன்; 2022 ஆண்டில், ரிம688.85 மில்லியன் மற்றும் 2023 ஆண்டில் ரிம330.03 மில்லியன் ஆகும்.
“2024 வரவு செலவு திட்டத்தை ஒப்பிடுகையில், 2025 ஆண்டு ரிம940.22 மில்லியன் அதாவது ரிம106.78 மில்லியன் குறைக்கப்பட்டுள்ளது.
“2023 இல் ரிம951.76 மில்லியன் உண்மையான செலவின செயல்திறனைக் கருத்தில் கொண்டு இந்த 10.19 விழுக்காடு குறைப்பு அவசியமாகிறது.
”2025 வரவு செலவு பினாங்கு மாநில வரவு செலவு வரலாற்றிலே மிகக் குறைவான மதிப்பிடப்பட்ட பற்றாக்குறையாக ரிம33.63 மில்லியனைக் காட்டுகிறது,” என்று
இன்று நடைபெற்ற பினாங்கு மாநில சட்டமன்ற ஆண்டு வரவு செலவு திட்டத்தைத் தாக்கல் செய்யும் போது இதனைத் தெரிவித்தார்.
அதற்கு முன்னதாக, 21 துறைகளை உள்ளடக்கிய 2025 ஆம் ஆண்டிற்கான வழங்கல் செலவு ரிம905,271,957 என்று அவர் விளக்கமளித்தார்.
வழங்கல் செலவினங்கள் விடுத்து, ஒருங்கிணைந்த நிதிச் சட்டத்தின் கீழ் மூன்று துறைகளை உள்ளடக்கி 2025 ஆம் ஆண்டில் அரசு பொறுப்பு செலவினங்களை ஈடுகட்ட மொத்தம் ரிம34,951,732 தேவை என்று அவர் விளக்கமளித்தார்.
“மதிப்பிடப்பட்ட வழங்கல் மற்றும் பொறுப்பு செலவினங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், 2025 ஆம் ஆண்டிற்கான பினாங்கு மாநில நிர்வாகச் செலவின மதிப்பீட்டின் மொத்தத் தொகை ரிம940,223,689 ஆகும்,” என்று பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் விளக்கினார்.
கூடுதலாக, நிர்வாக செலவின் கீழ்
207,547,367 அல்லது 22.07 விழுக்காடு ஊதியங்கள்; சேவைகள் மற்றும் பொருட்கள் (ரிம்193,925,552 அல்லது 20.62 சதவீதம்); சொத்துக்கள், (ரிம4,628,868 அல்லது 0.50 சதவீதம்); ஒதுக்கீடு மற்றும் நிலையான கட்டணம் (ரிம532,705,462 அல்லது 56.66 சதவீதம்); மற்றும் பிற செலவுகள் (ரிம1,416,440 அல்லது 0.15 சதவீதம்) என தாக்கல் செய்தார்.
2025 ஆம் ஆண்டிற்கான மேம்பாட்டுச் செலவு ரிம220 மில்லியனாக ஒதுக்கப்பட்டுள்ளது, இது 2024 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட ரிம374.71 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 38.65% குறைந்துள்ளது.
“குறைக்கப்பட்ட இந்த நிதி ஒதுக்கீடு, நடப்பு மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களை முடிப்பதில் மாநில அரசாங்கத்தின் கவனத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
“முக்கியமற்ற புதிய திட்டங்கள் ஒத்திவைக்கப்படும் அல்லது நிதி நிலைத்தன்மையைப் பராமரிக்க சிறிய ஒதுக்கீடுகள் வழங்கப்படும். அதே சமயம் மத்திய ஏஜென்சிகளுடனான வியூக ஒத்துழைப்புகள் வளங்களை மேம்படுத்தவும் திட்டங்களைச் செயல்படுத்தவும் உதவுகின்றது.
“2025 ஆண்டுக்கான நிதி தேவைகளைப் பூர்த்திச் செய்ய, மாநில அரசாங்கம் ரிம906.59 மில்லியன் வருவாய் பெறுவதற்கு இலக்கை நிர்ணயித்துள்ளது. இது 2024 இலக்கான ரிம533.08 மில்லியனில் இருந்து 70% அதிகரிப்பைக் குறிக்கிறது. திட்டமிடப்பட்ட வருவாயில், வரி வசூல் (ரிம223.65 மில்லியன்), வரி அல்லாத வருவாய் (ரிம570.41 மில்லியன்) மற்றும் வருவாய் அல்லாத ரசீதுகள் (ரிம112.53 மில்லியன்) ஆகியவை அடங்கும்.
பினாங்கு அரசாங்கம் 2025-க்கான வரவு செலவு திட்டத்தில் தற்போதைய பொருளாதார சவால்களின் அடிப்படையில் நிதி நிலைத்தன்மையை வலுப்படுத்துவதற்கான வியூகத் திட்டங்களை முன்னிலைப்படுத்துகிறது.